பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

329



155. இலட்சிய முயற்சி!


பயத்தை வெற்றிகொள்! அல்லது அடிமையாக வாழ்!
அடிமைச் சங்கிலிகூட, பயத்தைப் போலத் தடையல்ல
பயத்தைத் துறந்து துணிவைக் கொண்ட
நாடுகள் வளர்ந்து வருகின்றன! வாழ்கின்றன!
நமது நாட்டிலோ பயமுறுத்துகின்றனர்
மக்களும் பயந்து தொலைகின்றனர்!
மக்களாட்சியில் பயம் என்றால் மக்களாட்சிக்குப் பொருள்
என்ன?
மக்களாட்சியின் பெயரால் வல்லரசு நடக்கிறது என்பதா?
இதை நினைந்து நோவதா? அழுவதா?
அமெரிக்காவில் கூட பயமிருந்த வரையில்
அந்த நாடு முன்னேறவில்லை
பயத்தை உதறிவிட்டுத் துணிந்து துள்ளியெழுந்த பிறகே
அமெரிக்கா வளர்ந்தது!
தோல்வியை எண்ணி அஞ்சி
முயற்சியைக் கைவிடும் மாந்தனுக்கு விடுதலை இல்லை
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையல்ல
இலட்சியமும் இலட்சியத்தை அடைய எடுத்த
முயற்சிகளுமே வாழ்க்கை
பரம்பரைப் பழக்கத்தினை மாற்றப் பயப்பட்டுச்
செக்குமாடு ஆவானும் பயங்கொள்ளியே
இவனுக்கு, பயத்திலிருந்து விடுதலையும் இல்லை
வெற்றியும் இல்லை; வாழ்க்கையும் பாழாகும்
நல்லது முன் நில்! நல்லதுக்குப் போராடு!
அந்தப் போராளிகள் வரிசையில் முதலில் நில்
புவியை நடத்துவோர், பொதுவில் நடத்துவோர் சிலரே!

கு.XIV.22.