பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தந்திடும் ஒருநெறி! தகைமைசால் வாழ்க்கை
கட்டி முடிக்கப் பட்டது ஆமோ?
அவலம் தீர்க்கும் அறிவுக் கற்களால்
அன்பில் நனைந்த உணர்வுச் சாந்தினால்
அனுபவம் என்ற வாழ்க்கைக் கொத்தன்
நாழிகை தோறும் முயன்று முயன்று
கட்டி முடிக்கப் பெறுவதே யன்றோ?
வள்ளுவம் தந்த வள்ளுவன் செந்தமிழ்
மண்ணில் பிறந்த மாப்பே ரறிஞன்
அவன் மொழி மறை மொழி: ஆன்ற நிறைமொழி!
வள்ளுவம் பேசுதல் வண்மைத் தமிழில்,
பேசும் பொருளோ பேசும் மொழியினைக்
கடந்த பொருளாய்க் காட்சி தரும் பொருள்!
வள்ளுவன் நின்றது தெள்ளு தமிழகம்;
அவன்றன் சிந்தனை நின்றது அவனியில்!
உலகிற் கொரு நெறி அது பொது நெறியாம்.
சிதறிக் கிடக்கும் ஊர்களை இணைப்பது
சாலை. சிதறிய உள்ளங் களை யெலாம்
இணைப்பது வள்ளுவன் எழிலறச் சாலை!
வள்ளுவன் வகுத்த நெறிஅன் பாம்நெறி
ஆழிசூழ் உலகின் அறநெறி வள்ளுவன்
படைக்கும் உலகம் புதுமை உலகம்.
வேறு பாடுகளைக் கடந்தபே ருலகம்
சிறைக ளற்ற சிந்தனை உலகம்!
குற்றம் நீக்கும் உலகமஃ தன்று;
குற்றத்தின் குற்றம் நீக்கிடும் உலகம்!
இந்த உலகில் குற்றம் இழைத்தோர்
அந்தோ, கொடுமைக் காளா கின்றனர்.
குற்றம் செய்யத் துரண்டும் கொடிய
மனிதர் கோலாகலமாய் வாழ்கிறார்!