பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/375

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

363




187. உடலும் ஆன்மாவும்

நன்றி பாராட்டு!
நன்றி உணர்வினைப் போற்று!
கிணற்றுக்குள் வாளியை இறக்குவது ஏன்?
தண்ணீர் எடுப்பதற்கு
ஆனால், வருவதோ வெறும் வாளி!
அதுபோல வாழ்வு ஏன்?
உடல் ஏன்? உயிர் ஏன்?
உபயோக மற்ற நிலையில் சுமப்பது ஏன்?
எல்லாம் அமைந்த நிலையிலும் வெறுமை ஏன்?
நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும்
பலரிடம் பழகினால் உறவு வளரும்!
ஆன்மா வெறுமையுறாது; அன்பு நிறையும்!
வெறுமையுடன் போகவேண்டிய அவசியமில்லை.
இணைந்த இருவர் ஒரு மாதிரி எண்ணுங்கள்!
இருவரும் மாறிமாறி அன்பினை நிரப்பிக் கொள்ளுங்கள்!
இப்போது உங்களிடையே வேற்றுமை இல்லை!
வாளிகள் மாறுபடலாம்!
நிரப்பப்பட்டது ஒரே பொருள்! - தண்ணீர்!
அது போல உடல்கள் வேறுபடலாம்
ஆனால் ஆன்மாவால்,
ஆன்மாவில் நிரப்பப்பட்டுள்ள அன்பால்
இருவரும் ஒருவரே!
இந்நிலை மாந்தர்க்கு வானகம் வையகத்ததே!