பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/385

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

373


196. தேவையைத் தேடு!

நீ பிறப்பில் வென்றவனும் அல்ல, இழந்தவனும் அல்ல,
நீ, எப்படி வாழ்கிறாய்?
நீ எப்படி வாழ்க்கையின் விளையாட்டை
விளையாடுகின்றாய்?
என்பதைச் சார்ந்ததே வெற்றியும் தோல்வியும்!
உன்னுடைய பொதுவான பழக்கங்களே
தலைமுறைகளைவிட அதிகப் பங்கு பெறுகிறது
உன்வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்
நாள்தோறும் வெற்றிப் புள்ளிகளைக் கூட்டுக!
உன் மூதாதையர் வாழ் நிலைக்கும் உன் வாழ் நிலைக்கும்
வித்தியாசம் காட்டுக! அதுவே வளர்ச்சி!
உன் மூதாதையர்
உனக்குச் சட்டை தைத்து வைத்தல் இயலாது;
பொருந்தாது.
அப்படி அவர்கள் தருவதும் இல்லை!
நீ, தேடு.! உன் தேவையை நீ தேடு!
உன் மூதாதையர் உன்னைக் கேட்பர்;
நீ, என்ன செய்தாய்?
என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று!
இதுவே உன்னை நிர்ணயிப்பது; நிறுத்துவது!
உன் மூதாதையர் நிலையை
உன் கணக்கில் யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்!
நீ, வாழ்! செயல்களால் வாழ்க!
வரலாற்றில் உன் பெயரில் எஞ்சி நிற்பது
செயல் ஒன்றேயாம்!