பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/409

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

397

219. கிராமத்தைக் காப்பாற்றுங்கள்!

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றான் வள்ளுவன்
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'
என்றான் பாரதி!
இன்று உழவன் நிலை என்ன?
நாளும் கிராமப்புற வறுமை வளர்கிறது!
உலகுக்கு உணவளிக்கும்
கிராமப்புற உழவன்
நியாயவிலைக் கடையில் நிற்கிறான்,
அன்றைய தேவைக்கு அரிசி வாங்க!
கிராமங்கள் களஞ்சியங்களாக இருந்தன
ஒரு காலத்தில்!
இன்றோ, கிராமங்களில் வறுமை.
கிராமப்புறச் செல்வம் நகர்ந்து நகர்ந்து சென்று
நகரங்கள் உருவாகின்றன!
அன்று கிராமத்தை நோக்கி மக்கள்!
இன்று கிராமமக்கள் நகரத்தை நோக்கிப் படையெடுப்பு
சோம்பலும் சூதும் நெடுநகையும்
பாலியல் குறும்புகளும்! நகரத்து நடப்புகள்
கிராமத்துக்குள் நாளும் படையெடுக்கின்றன!
ஐயோ, பாவம்!
செழித்த கிராமப்புற நாகரிகத்தைத் துறந்து
நகர்ப்புறக் கவர்ச்சி நாகரிகத்துக்குப்
பலியாகின்றனர் இளைஞர்கள்
ஒ! ஒ! கிராம மக்களே!
கிராமத்தைக் காப்பாற்றுங்கள்!
சுதந்திரமாக வாழுங்கள்! வளருங்கள்!