பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

401



222. உடன்பாடிலாதவர் உறவு

உடன்பாடில்லாதவர் உறவுடன் கூடிய வாழ்வு குடங்கருள் நச்சுப்பாம்பொடு உறைந்தது போலாம். உடன்பாடிலாதவர்கள் உறவு
விலைமகள் உறவு! -
இம்மண்ணில் பிறந்ததும் வாழ்வதும்
அனுபவித்து வாழத்தான்!
அனுபவத்திற்கெல்லாம் தாய் அன்புதான்!
அன்பு, உறவினை நல்கும்! -
அன்பு, ஊக்கமது தரும்!
அன்பு, முயற்சியில் செலுத்தும்!
செல்வம் படைக்கலாம்;
சேர்ந்து வாழலாம்!
மாறாக, -
உடன்பாடிலாதவர் தொடர்பு - உறவு,
நாளும் நம்பிக்கையின்மையை வளர்த்து
நரகத்தில் செலுத்தும்! .
இஞ்சி தின்ற குரங்கென ஆகும்!
ஊக்கம் கெடும். ஆள்வினை அழியும்
வீடு தேடி வரும் ஆக்கம் கை நழுவும்.
அல்லது தட்டிப்பறிப்பர் தகவிலாதவர்கள்!
துணிவு கெடும் பயம் உண்டாகும்.
துணிவு இல்லாத வாழ்க்கை தோற்பாவைக் கூத்தாகும்! கூத்தாட்டும் தோற்பாவை என்செய்யும்?
பாவைக் கூத்தை ரசிக்கலாம்! -
ஆனால், வாழ்வாகாது! பிழைப்பு ஆகலாம்!
சீ.சீ நாயும் இந்தப் பிழைப்புப் பிழைக்கும்!
சென்றது, சென்றதாகட்டும்! -
உடன்பாடு இலாதவர் உறவினைப் பற்றிக் கவலற்க! விழிப்புடன்
உனது பணியை உயிர்ப்பித்திடுக!