பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/425

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

413


அனுப்பி வைத்தார். சிவநேசன் வேண்டா வெறுப்போடு பட்டணம் சென்றான். படிப்பைத் தொடங்கினான். படிப்பில் மிகவும் கவனமாக இருந்தான். ஆண்டு தவறாமல் வகுப்புக்களில் தேர்ச்சி பெற்று வந்தான். விடுமுறைக் காலங்களில்கூடச் சிவநேசனைப் புதுரருக்கு வராமலே தடுத்துவிட்டார் பண்ணையார். தமது மனைவியுடன் விடுமுறைக் காலங்களில் பட்டணத்துக்குச் சென்று அங்கிருந்தபடி சிவநேசனைச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் சென்று, புதுாரையும், மொட்டையனையும், பூங்கொடியையும் சிவநேசன் மறக்கும்படி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சிவநேசனுக்குப் பூங்கொடி நினைவு அகலவில்லை; தந்தையிடம் சொல்லவும் துணிவில்லை.

காலம் உருண்டோடியது. மொட்டையன் ஒரு விபத்தில் காலமாகிவிட்டான். பூங்கொடி பூப்பெய்தினாள். மொட்டையன் மனைவி-பூங்கொடியின் தாய்-உழைத்துக் குடும்பத்தை நடத்தி வந்தாள். பூங்கொடிக்கு இரண்டொரு வரன் வந்தனர். ஆனால், சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிவிட்டாள் பூங்கொடி.

சிவநேசன் டாக்டருக்குப் படித்து முதல் வகுப்பில் தேறினான். புதுரரின் முதல் பட்டதாரி சிவநேசன்! மருத்துவப் பட்டதாரி சிவநேசன்!

சிவநேசன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்பொழுது பிச்சாண்டியா பிள்ளையை வாத நோய் பீடித்தது. படுத்த படுக்கையானார். அதனால் மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் புதுாருக்கு வர அவன் ஆயத்தமானான்.

அன்று புதன் கிழமை. புதுரர் கிராமச் சந்தை நாள். அதனால் புதுார் சுறுசுறுப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல, பண்ணையாரின் பிள்ளை டாக்டராகி வருகிறார் என்பதற் காகவும் அவரை வரவேற்க கிராமம் களை கட்டி இருந்தது.