பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/427

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

415


சிவநேசனிடம் தாளும் பென்சிலும் கேட்டார். தாளில் எழுதிக் காட்டினார். முதல் வார்த்தை திருமணம் என்பது பண்ணையார், “இன்றோ நாளையோ எனக்குச்-சாவு வரப்போகிறது. அதற்குள் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பது என் ஆசை” என்று சைகை மூலம் பேசினார்.

சிவநேசன் மெளனம் சாதித்தான்.

தாய், தன் தம்பி மகளைப் பற்றி எடுத்துக் கூறினாள். பண்ணையார் கையசைத்து மறுத்து விட்டு, பெண் பற்றிய முடிவைச் சிவநேசனிடமே விட்டுவிடு; என்று சைகை காட்டினார். சிவநேசனுக்கு மகிழ்ச்சி ஒருபுறம், தயக்கம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம். மெளனமானான்.

பண்ணையார் சிவநேசன் முகத்தைப் பார்த்தார். சிவநேசன் தலை குனிந்தான்.

பண்ணையார், "சிவநேசா! எனக்குப் புரிகிறது, உன் மெளனத்தின் அர்த்தம். நீ, யாரை நினைத்துக் கொண்டிருக் கிறாய் என்பதும் தெரியும். இப்போது நானும் பழைய பண்ணையார் இல்லை. பூங்கொடியின் அப்பா மொட்டையன் தன் உயிரையே பணயமாக வைத்து ஒரு விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றினான். அதனால்தான் அவன் இறந்தான். இந்தப் பண்ணையார் இப்போது இருப்பது மொட்டையன் தந்த பிறவி போலத்தான்! மொட்டையனின் ஆவி சாந்தியடைய நீ பூங்கொடியைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு மிகவும் சம்மதம். இரட்டிப்பு மகிழ்ச்சியும்கூட!” என்று எழுதிக் காட்டினார்.

சிவநேசன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். தந்தை அழ, மகன் அழ, ஆலிங்கனம் செய்து கொண்டனர்.

பூங்கொடிக்கும் பண்ணையார் மகன் சிவநேசனுக்கும் ஆரவாரமின்றித் திருமணம் நடந்தது.

இதுதான் மெளனப் புரட்சி!