பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொன்னாள்: "என்னால் வேலை செய்ய முடியல என்னால் இனி உழைக்க முடியாது. கொண்டு வந்தா ஆக்கிப் போடறேன்" என்று, மாறனுக்குக் கோபம் வந்து விட்டது! அதே போழ்து வாழ்க்கையிலும் ஒருவகையான விரக்தி வந்து விட்டது! எங்காவது போய்த் தற்கொலை செய்து சாகலாம் என நினைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவனைப் போல் நடந்து சென்றான். நண்பகல் வந்தது! மாறன் களைத்துப் போனான்! சாலை ஓரத்தில் நின்ற ஒருமரத்தின் நிழலில் படுத்துறங்கினான். பசியின் கெடுபிடியில் உறக்கம் வரவில்லை!

அப்பொழுது கால்நடையாக வந்த ஒரு பெரியவர் அந்த மரத்து நிழலில் உட்கார்ந்து தாம் கொண்டுவந்த கட்டமுதை உண்ண முயன்றார். அப்போது அவர் மாறனைப் பார்த்து "உண்ண, வா” என்று அழைத்தார். மாறனுக்குப் பசிக்குச் சோறு கிடைத்தது. உண்டு முடித்த பிறகு, பெரியவரும் மாறனும் பேசத் தொடங்கினார்கள்.

"இளைஞனே, உன் பெயர் என்ன?”
"என் பெயர் மாறன்!”
"ஏன், சோர்ந்து இருக்கிறாய்?"

"ஐயா, வீட்டில் வறுமை! தந்தைக்கு முடியவில்லை! தாய்க்குத் தள்ளாமை! எனக்கோ வேலை கிடைக்கவில்லை. என் தாய் என்னைத் திட்டிவிட்டாள்! சோறு இல்லை யென்று கூறிவிட்டாள்! உண்மையாகவே சோறு இல்லை!"

"அதற்காகக் கவலைப்படுகிறாயா?”
"ஆம் ஐயா!"
"உங்களுக்கு நிலம் உண்டா?”
"இல்லை!"
"மாடுகள் உண்டா?"
"இல்லை!"