பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/461

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஒரு குறள்

ன்று நமது நாடு அளவான சிறிய குடும்பத்தை அவாவி நிற்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் வளர்ந்து கொண்டே போகிறது. அரசு குடும்ப நலத்திட்டத்தைப் பற்றி - சிறிய குடும்பம் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகிறது. இன்று ஒன்றே ஒன்று என்ற முடிவுக்கு அரசு வந்திருக்கிறது.

அது சரி! இந்தக் குடும்ப நலத்திட்டம், குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் பற்றித் திருவள்ளுவர் ஏதாவது கூறியுள்ளாரா ? திருவள்ளுவருக்குக் குடும்பக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை உண்டா? பிறக்குமுன் காப்பதை அனைவரும் விரும்புவர். கருக்கொள்ளுதலுக்கு முன் காப்பது அறம் என்று கூறலாம். திருவள்ளுவர் காமத்துப் பாலில் குடும்ப நலம் - குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசுகிறார்.

கள் வைத்துள்ள பானை பரவசமூட்டுவதில்லை. 'கள்' நூறு தடவை சொன்னாலும் களிப்புத் தருவதில்லை. ஆனால் காமம் அப்படியன்று. காம வசப்பட்ட தலைவன் தன் தலைவியாகிய காதலியை நினைத்தாலும் மகிழ்ச்சி பொங்கும். காதலியின் உருவத்தைக் கண்டாலும் களிப்புத் தோன்றும். காமம் நுகர்ந்துதான் மகிழ வேண்டும் என்பதில்லை. காமம் புணர்ச்சியில்தான் மகிழ்ச்சியுறும் என்ற நியதி இல்லை. காமத்தின் வழிப்பட்ட காதலர்கள் புணர்ச்சியில் கூடினால்தான் குழந்தை பிறக்கும்; புணர்ச்சியைத் தவிர்த்துக் காதலியை நினைப்பதன் மூலம் காண்பதன் மூலம் மகிழும் பொழுது குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை.

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்துக் குண்டு" (குறள் - 1281)

இந்தத் திருக்குறள் குடும்ப நலம் கற்பிக்கும் திருக்குறள்! குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளல் பற்றியது. ஆதலால் நினைத்து மகிழுங்கள். கண்டு களிப்புறுங்கள்; கூடுதலைத் தவிர்த்திடுங்கள்!