பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலிருந் திறங்கிய வழியினை நோக்கிச்
சென்றுஅவ் வளைவினைக் கடந்து நீண்ட
நேர்கோ டதனில் நிமிர்ந்து முடிவது!
இஃதென எழுத்தா? இல்லை. பொருளாம்.
குறைவிலா நிறைவு கோதிலா அமுது
முழுநிறை முழுமுதல் தனைஉணர்த் துவதே!
வட்ட வடிவமாம் மேலோன்! மேலோன்
மேலே இருப்பவன் ஆகான் ஆகான்!
கீழிருப் பவனை மேலாக் குபவனே
மேலோ னாவான், மேதகை வள்ளுவன்
கண்ட கடவுள் மேலே யிருந்து
கீழே யிறங்கிக் கேடெனும் தாழ்வில்
தங்கிக் கிடந்து தவிக்கும் உயிர்களை-
சிறுமையைப் பெருமையாய்க் கொண்டு, களித்துக்
கிடக்கும் உயிர்களை நோக்கிக் கீழே
இறங்கி அவற்றுடன் இணைந்து நின்று
அணைத்து மேலே அழைத்துச் சென்றிட
வான்பழித் திம்மண் மீதுவந் தருளி
நேர்பெற இருநிலை நிறுத்தியே வீடு
பேறளித் திடும்அப் பெற்றியை உணர்த்தும்!
இத்தகைக் கடவுளை இணையிலா வள்ளுவன்
அகர வடிவில் அமைத்துக் காட்டினன்!
வள்ளுவன் கண்ட கடவுளைக் காட்டிட
புதிய தலைமுறைக் கவிஞர் பொங்கிடு
சொற்றமிழ்த் தேனில் சொக்கிட வைக்கும்
சுந்தரக் கவிஞர் வந்தனர்! சுவைமிகு
பாட்டினில் காட்டுவர், பாங்கொடு நமக்கே!