பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பண்டு மீனவன் பைந்தமிழ்த் தலைமகன்.
அத்தலை மகனின் அரும்பெயர் பூண்ட
பாநல மிக்க மீனவன் இங்கே
வள்ளுவன் கண்ட தலைமகன் மாண்பினைப்
பாடுவர் தேந்தமிழ் பருகிநாம் மகிழவே!

முடிப்பு:

மீனவன் செந்தமிழ்த் தேனினைக் குழைத்து
வள்ளுவன் கண்ட தலைமகன் மாண்பினைத்
தெள்ளத் தெளியப் பாடினர்! நம்மில்யார்
அத்தகு தலைமக னாவதற் குரியோர்?
காலம் கரைத்துக் கோலமங் கையரின்
கரந்தொட் டேகருப் பாதையை இயக்கி
இந்த உலகினுக் கிடர்கு ழாதீர்!
காரியம் ஆற்றுமின்; கவலையைப் போக்குமின்,
தாரணி போற்றும் தலைமகன் ஆகுமின் !


3. கவிஞர் அரு. சோமசுந்தரம்

அறிமுகம்:

பிறவா யாக்கைப் பெரியோன் தானும்
பெய்வளை உமையாள் கேள்வனாம். அவன்தான்
பிறவா யாக்கையோன் மட்டு மல்லன்
ஒப்பிலா மங்கை ஒருத்தியை என்றும்
பிரியா யாக்கையைப் பெற்றவ னன்றோ?
“குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளும் தானும் உடனே காண்க!”
என்றே மணிவா சகமிதை இயம்பும்.
இன்ப நெறியிது இன்றமிழ் நெறியாம்.
தலைமகன் எனில்தலை மகளுமுண் டலவா?