பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

49


பேதுறு துன்பம் வருமுன் பேணி
ஆன்ற அறிவும் ஆள்வினைத் திறனும்
பெருமையும் சேர்ப்பவர் என்றனன் வள்ளுவன்.
இத்தகு பெரியோர் எங்கனை வர்க்கும்
கிட்டிடக் கூடுவர்? நாடொறும் நமக்குக்
கிடைப்பவர் நம்மை உயர்த்துவோ ரல்லர்.
நம்முடைத் தோளில் நாக ரிகமாய்
ஏறிஉட் கார்ந்துகொண் டியன்றவா றாட்டித்
தம்மை உயர்த்தித் தம்காரியங்கள்
சாதித் துக்கொளும் ‘கனவான்’களையே
காணுகின்றனம் உலகியற் கவிஞன்
வள்ளுவன் பெரியோர் இவரென வகுத்துக்
காட்டினன். அப்பெரி யோர்தமைக் கனிந்த
பேரன் பதனிற் பெரியகண் ணப்பன்
பேரினைக் கொண்ட இக்கண் ணப்பன்
கவினுறு கவிதையில் வடித்துத் தருகிறார்!
உண்மையிற் பெரியோன் உயர்கண் ணப்பன்!
உரத்த குரலில் ஓங்கிக் கூறலாம்.
காசினி யில்நம் கண்ணப் பனைவிடச்
சிறந்த பெரியோன் பிறந்தது மில்லை!
அன்பென ஆயிரம் ஆயிர மாகப்
பேசினும் அன்பு பிறங்கிடக் காணோம்.
முகத்தில் பரந்த பள்ளங் களைமுகப்
பவுடரைப் பூசி மூடி மறைத்தல்போல்
சுயகா ரியமெனும் பள்ளம் மறைத்திடத்
தூயஅன் பினர்போல் பூசிப் பேசுவர்.
விழிகளைத் தந்திட வேண்டா. வேதனை
விளைத்திடா திருந்தால் அதுவே போதும்!
பேசா உருவம் பேசிடச் செய்து
உளமார் காதலால் உருகிக் கனிந்து