பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

65


சுந்தரம்! சொற்றமிழ்ச் சுடர்தரு கவிஞன்
நமக்கிங் கியைந்த நவமிகு கவிஞன்
பழமையின் பயனும் புதுமையின் பொலிவும்
போற்றும் பொதுநெறி நம்நெறி யாகும்!
பகுத்தறி வென்பது பண்பட் டோங்கிய
சமய நெறிக்குப் பகையா காது
பெரியார் பழுத்த “பகுத்தறிவுப் பழம்”
அவர்பகுத் தறிவை அழகுறக் காட்டுவார்.

7. புலவர் பழம் நீ

பாரினில் பழம்ஒரு புரட்சியின் சின்னம்.
அரும்பு மலராய் மலர்கா யாகிக்
கனியா கின்றது. காட்சிஇஃ தியற்கை
ஒன்றோ டொன்றொவ் வாஉறு பருவம்
கழித்தே உரிய பயனும் நலனும்
பெற்றுச் சிறந்திடும் நற்சுவைக் கனிதான்!
அஃதொரு புரட்சியின் சின்னமா யமைந்தது!
“பழம்நீ” என்றே பண்டொரு நாளில்
மைந்தன் முருகனை வான்சிவன் மொழிந்தான்!
இப்பழ மோதேன் சுவைத்தமிழ் சொட்டும்
தெள்ளு தமிழ்க் கவிப் பழம்!புத் தறிவிற்
பிறந்த “புரட்சியின் சின்ன”மாய்ப் பெரியார்
பிறங்கிடும் பான்மையைப் போற்றிப் பேசிட
வந்தனர், வண்டமிழ் அமுதம் பொழியவே.

முடிப்பு:

கவியரங் கத்தைச் செவியுறக் கேட்டுப்
பெரியார் நெறியினைப் பேணித் தமிழினம்
ஒன்றென வாழத் துடித்திடும் அவையீர்
நன்றென வாழ்த்துவம், வாழ்கநற் றமிழே!