பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

79


நிலவல்ல! அறிவியற் படிப்பில் தமிழில்லை!
எத்துறை யிலும்தமிழ் சிறந்திட வில்லை!
ஆங்கில மொழியில் ஆர்வம்நம் அன்னை
மொழி வளர்ச்சிக்குத் தடையா யிற்று!
வெள்ளி நிலவனே! வருக! என்சொல
நினைக்கிறீர்? வந்து உரைத்திடு வீரே!

முடிப்பு:

கவிஞர் வெள்ளி நிலவன் கவிதையைக்
கேட்டோம்! கவிஞர் வெள்ளி நிலவன்
நிறைநிலாக் காட்டாது அமாவா சையையே
விரிவாகக் காட்டி விளக்கினார் அன்றோ!
அண்ணா வழியில் தமிழ்ஒளி விளக்கினை
ஏந்தி நடப்போம்! இருளினை நீக்குவோம்!
அறிவினை வளர்ப்பது அன்னை மொழி, தமிழ்!
மொழிகளில் மூத்தது எந்தமிழ் மொழியே!
எண்ணத்திற் சிறந்தது எந்தமிழ் மொழியே!
இலக்கியத் தாற்சிறந் ததும்தமிழ் மொழியே!
மண்ணையும் விண்ணையும் மாண்புற அளந்து
காட்டிய மொழியும் எந்தமிழ் மொழியே!
கூத்து, இசை, இயல்என வளர்ந்தது முத்தமிழ்!
ஆரியத் தால்தமிழ் கெட்டது அற்றை நாள்!
புண்ணிருந் தாறிய பூவுடல் தழும்புபோல்
தமிழில் ஆரியம் கலந்து கெடுத்தது!
மயிலாடு துறை மாயவர மானது!
மறைக்காடு வேதா ரண்ய மானது!
திருநிலை யென்பது ஸ்திரமா யானது!
சோறு என்பது சாதம் ஆனது!
மணத்தி னால்மனம் கூடிடும் நிகழ்வாம்
திருமணம் விவாக சுபமுகூர்த்த மானது!