பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

83


அரசியல் வாழ்வு வாழ்ந்தவர் தம்மில்
இவற்றை அணியெனக் கொண்டவர் அண்ணா!
இவர்போல் ஒருவர் யாரோ கூறுக!
காட்சிக்கு எளியர்; கடுஞ்சொல்லர் அல்லர்.
இனியபண் பாட்டுக்கு இலக்கிய மானவர்
தமக்கென ஒர்நிலை, நினைப்புக் கொண்டவர்.
அரசியல் வாழ்வில் கொள்கை, கோட்பாடு
இவற்றில் வேறுபாடு உடையவ ராயினும்
அனைத்துக் கட்சி யாளரிடமும்
நொய்முனை யளவும் பிரிவுணர் வின்றிப்
பெருந்தகை மையொடு புதியபண் பாட்டுத்
தலைவராய் விளங்கிய தன்மையை எடுத்துச்
சொல்லிட வார்த்தை இல்லை! இல்லையே!
இற்றைநாள் அரசியல் இழந்து நிற்பது
அண்ணா வின்பண் பாடே யாகும்!
அண்ணா வழியில் பண்பாடு போற்றிப்
பாடறிந் தொழுகுவோம் பாரினில் நாமே!

பொற்கிழிக் கவிஞர் டாக்டர். ச. சவகர்லால் -
அறிமுகம்


பொற்கிழிக் கவிஞர்; பொதிகையில் தமிழ்நலம்
காக்கும் நம் திருவள் ளுவர்கல் லுரரியின்
முதல்வர்; எப் போதுஇவர் அரசிய லுக்குச்
சென்றார்? நமக்குத் தெரிய வில்லையே!
இனியநற் கவிஞரே! பாடநீர் வருவது
கட்சி அரசியல் அல்ல!அண் ணாவின்
அரசியல் ஞானம்! ஒருசிலர் மட்டும்
இயக்கும் கட்சிக ளுக்கே அரசியல்
சொந்த மாகாது! என்பது அறிக!
மக்கள் நெறிஅர சியல்நெறி யாகும்!