பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மூலதனமாகும். அதுமட்டுமன்று தேசப் பாதுகாப்புக்கு படை மட்டுமன்று போலீசு மட்டுமல்ல, கல்வியே மிகக் குறைந்த செலவில் செய்யப் பெறும் பாதுகாப்பு ஆகும்.

மனிதப் பிறப்பு உயர்ந்தது; மிக மிக உயர்ந்தது. எண்ணரிய ஆற்றல்கள் உள்ளடங்கிய பிறப்பு மானுடப்பிறப்பு. மானுடத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. ஆயினும் மானுடத்தின் உள்ளடக்கமாகிய ஆற்றல் கல்வியினாலேயே செயற்பாட்டு நிலையையும் பயன்பாட்டு நிலையையும் எய்தும். கல்வி என்பது சற்றும் பயன்படாத செய்திகளை மூளையில் திணித்து, திரும்ப அவைகளைத் தேர்வுகள் மூலம் வெளிக் கொணர்வதல்ல. வைரக்கற்களுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒளியைக் கடைசல் மூலம் வெளிக் கொணர்வதைப் போல, மனிதனிடத்தில் முதலீடாக இருக்கும் உயர்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதும் அந்த ஆற்றலை வளர்ப்பதும் கல்வியின் நோக்கமாகும்; பயனாகும். "பொதுக்கல்வி" என வந்தபின் இந்தத் தனித்தன்மைமிக்க செயல்முறைகள் ஆசிரியர்களிடத்தில் காணப்பெறவில்லை; மாணவர்களிடமும் காணப்பெறவில்லை.

மனிதன், வாழ்க்கையை முறையாக மதிப்பீடு செய்யத் தெரிந்து கொள்ளவேண்டும். இன்று பலர் வாழ்க்கையை மிகமிகச் சாதாரணமாக மதிக்கின்றனர். நிலையாமையை அதிகமாக எண்ணுகின்றனர்; வாழ்க்கையைக் கொச்சைப் படுத்துகின்றனர். பொன்னுக்கும், பொருளுக்கும் வாழ்க்கையை ஒத்தி வைக்கின்றனர். இவர்களிடம் "காலம் பொன்போன்றது" என்ற பழமொழி எடுபடுமா? வாழும் காலம் அருமையானது; மிக மிக அருமையானது.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடுமின்”

என்று அன்று திருநாவுக்கரசர் வாழ்க்கையை மதிப்பீடு செய்தார். இன்று மீண்டும் வாழ்க்கையை வாழுங்காலத்தை