பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழவேண்டும்; வல்லவர்களாகவும் வாழவேண்டும். நன்மை செய்வதில், நல்ல காரியங்களைச் செய்வதில் ஆர்வம் உடையவர்களாகவும் இன்பம் அடைபவர்களாகவும் விளங்க வேண்டும். நாம் தரும் கல்வி விலங்கியலிலிருந்து மனிதரை மீட்டு, மனிதராக்கி இம்மண்ணில் அமரர்களாக்கி வாழ்ந்திடச் செய்தல் வேண்டும். அத்தகு விழுப்பம் நிறைந்த கல்வியை நாம் நமது குழந்தைகளுக்கு வழங்குகிறோமா? எண்ணுக!

நமது நாட்டு கல்விமுறை எதிர்முறையானதாகவே அமைந்திருப்பதை நாம் உணர்ந்ததாக வேண்டும். கடவுள் பெயரால் அமைந்துள்ள நமது புராணக் கதைகள்கூட எதிர்மறை அமைப்பேயாகும். தவறு செய்தான், தண்டிக்கப்பட்டான்; மன்னிக்கப்பட்டான் என்பது போலத்தான் நமது புராணங்களில் அமைந்துள்ளன. நமது சிந்தனை, கல்விமுறை எல்லாமே மறுப்பின் வழியன. அதாவவது எதிர்மறை வழியினவேயாம். இதனால், நமது இளைஞர்கள் ஊக்கத்தை இழக்கின்றனர். வாழ்க்கையில் ஆர்வம் என்பதனைப் பெறாமலே, சுற்றி சுற்றி வந்து எய்த்துக் களைத்துப் போகின்றனர். நமது நாட்டுக் கல்வி முறையில் புத்தகங்களின் சுமைதான் கூடியிருக்கிறது. புத்தகச் சுமை குறைந்து சிந்தனைத் திறன், செயல் திறன் வளர்வது அவசியம். செயல் மூலம் கல்வி என்பது இன்றைய உலகின் நடைமுறை, நமது நாட்டில் செயல் மூலம் கல்வி முறையை மிகுந்த அளவு அறிமுகப்படுத்துதல் வேண்டும். அவசியமும்கூட நமது நாட்டுக் கல்வி முறையில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கும் போக்கு மேலோங்கி வருகிறது. ஆங்கிலத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் என்பது விளங்கவில்லை. ஆங்கிலம் வாயிலாகக் கற்பதனால் மற்ற பாடங்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இது மிகவும் இரங்கத்தக்கநிலை. தாய்மொழியை மதித்துப் போற்றுங்கள்; மடமையைக் கொளுத்துங்கள்; தாய்