பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதம் வளரும் தன்மையது. வளரும் சமுதாயமே வாழும். ஆதலால் கல்விச் சிந்தனை மாறவேண்டும்; வளர வேண்டும். பழைய பாடங்களையே, பல்லவி அனுபல்லவி ஆக்குவதில் பயன் இல்லை. ஆசிரியர்கள் பழக்கப்பட்டுப் போன பாதையிலிருந்து விலகிப் புதுமை நெறிகளில் பொதுமை நெறிகளில் நடை பயிலவேண்டும். சமுதாயத்தில் எழும் புதுப்புதுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றலை ஆசிரியர்கள் பெற்று, அத்திறனை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். புதிய கல்வி முறைகளிலும் சமயச் சார்பற்ற வாழ்முறைகளிலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டிலும் மாணவர்களுக்கு அக்கறையை ஆசிரியர்கள் துரண்டி வளர்க்க வேண்டும்.

அடுத்து ஆசிரியர்-மாணவர்கள் உறவில் உள்ள ஒரு பிரச்சனை. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் ஏற்க முடியாத நிலையில் மாணவர்களில் பலர் மந்த நிலையில் இருப்பது. இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களில் பலர், முதல் தலைமுறையாக வந்துள்ளனர். தரமான கல்விச் சூழலுக்குரிய பாரம்பரியம் (Hereditary) சுற்றுப்புறச் சூழ்நிலையும் (Environment) இந்த மாணவர்களுக்கு இல்லை. இவர்களுடைய மூளைப் புலன்கள் முதன் முறையாக இயக்கப்படுகின்றன. கடினத் தன்மை இருக்கலாம். ஆயினும் ஆசிரியப் பெருமக்கள் கடின உழைப்பை மேற்கொண்டால் இவர்களையும் முதல்தர மாணவர்களாக்க முடியும். ஓர் இயந்திரம் ஓடவில்லையானால் அந்த இயந்திரத்தைத் தூக்கியா எறிந்து விடுகின்றோம்? அல்லது இயந்திரத்தை அடிக்கிறோமா? ஓடாத இயந்திரத்தை அடித்தால் பயன் ஏற்படுமா? இயந்திரத்தில் உள்ள பழுதைக் கண்டுபிடித்து பழுதை நீக்குவதன் மூலம் இயந்திரத்தை ஓடவைக்க முடியும். இதுபோன்றதே ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. உண்மையான கல்வி முறையும்கூட, ஆசிரியர் மாணவரைப் பயமுறுத்துவதன் மூலமோ, அடிப்பதன்