பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

131


பொருள்கள் பற்றிய அறிவியல் தேவை. திருமூலர் உடன் பாட்டாலும் எதிர்மறையாலும் உடம்பின் நலன் பற்றிப் பேசுகின்றார்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!”
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்”

என்பார் திருமூலர். உடம்பின் உழைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் தேவை. உடம்பை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அறிவு தேவை. நல்ல அறிவியல் சார்ந்த உழைப்பு தேவை. உடலின் வளர்ச்சி, உயிரின் ஆக்கம் உழைப்பில் இருக்கின்றன. உலகை இயக்குவது உழைப்பு. குறைந்த நேரத்தில் குறைந்த சக்தியைச் செலவிட்டு உழைக்கவும் உழைப்பின் பயனைக் காணவும் மனிதத்தின் உழைப்பை எளிமைப்படுத்தவும் அரிய கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. உடல் தேவை, உழைப்பின் காலத்தைச் சிக்கனப்படுத்தி உயிர்த் தேவையாகிய கற்றல், கேட்டல், நட்பாடல், பிரார்த்தனை போன்றவைகளில் பயன்படுத்த ஆன்மாவை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏன்? மானுடம் உயர்நிலையை உன்னத நிலையை அடையவேண்டும்.

உழைப்பு, மானுடம் வாழ்க்கைப் போக்கில் கண்ட ஓர் அரிய பண்பு. உலகத்தின் உயிர்ப்பும் உழைப்பேயாம். அந்த உழைப்பும் அறிவியல் சார்ந்த உழைப்பாக உற்பத்தி சார்ந்த உழைப்பாக அமைந்தால் நல்லது. பணம் படைக்கப்பட்ட பின் பணத்திலிருந்து பணம் செய்யும்முறை வளர்ந்து வந்துள்ளது; வளர்ந்து வருகிறது. இது நெறியுமன்று; முறையுமன்று. இன்று உற்பத்தி சாராத உழைப்பில் செல்வம் திரட்டுவதுபோல உற்பத்தி சார்ந்த உழைப்பில் செல்வம் திரட்ட இயலவில்லை. இது ஒரு பெரிய குறை.

இன்று நமது நாட்டில் இருப்பது பண மதிப்பீட்டுச் சமுதாயம். இதை மனித மதிப்பீட்டுச் சமுதாயமாக மாற்றவேண்டும்; வளர்க்க வேண்டும். பணத்திலிருந்து பணம்