பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

203


சூரபதுமன் அறிவின் மேலோனாகவும், சிறந்த பக்தனாகவும் விளங்கியதாகப் பேசப்படுகிறது; நல்ல ஆற்றல் வாய்ந்தவன் என்று பேசப்படுகிறது. எனினும், ஆணவ மிகுதியால் அவன் தனது ஆற்றலை துஷ்பிரயோகம் செய்தான். அப்போது நமது திருமுருகன், எழுந்தருளி, சூரபதுமனை வென்று, அவனது ஆணவத்தை அடக்கி ஆட்கொண்டான். அவ்வளவு தானே தவிர சூரபதுமன் கொல்லப்பட்டதாகவோ, அழிக்கப்பட்டதாகவோ கருதுவது தவறு.

அன்று வாழ்ந்த நமது சிவாசாரியார்கள் நமது கச்சியப்ப சிவாசாரியாரைப் போலவே தெளிவான தத்துவப்புலமை பெற்றிருந்தனர். சுகானுபவம் பெற்றிருந்தனர். அவற்றின் கூட்டுக் கலவையாகப் பல அருட்பாடல்களை வடித்துத் தந்திருக்கின்றனர்.

கந்தபுராணம் மிகச்சிறந்த பக்திக் காவியம். நமது கச்சியப்பர் நல்ல பாத்திரத்தைப் பற்றிப் பேசும்போதும் சரி, கெட்ட பாத்திரத்தைப் பற்றிப் பேசும்போதும் சரி; வாழ்க்கையின் குறை நிறைகளைப் பின்னிப் பிணைத்தே பேசினார். முருகனைப்பற்றிப் பேசும்போதும் சூரபதுமனைப் பற்றிப் பேசும்போதும் அப்படியேதான்.

சூரபதுமன் நமது முருகப்பெருமானைப் பற்றிப் பேசுகின்றபோது.

"சூழுதல் வேண்டும் தாள்கள்
தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி
துதித்திடல் வேண்டும் தாலும்
ஆழுதல் வேண்டும் தீமை
அகன்றுநான் இவற்(கு)ஆ ளாகி
வாழுதல் வேண்டும்; நெஞ்சம்
தடுத்தது மானம் ஒன்றே"