பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று குறிப்பிடுவதாகக் கச்சியப்பர் கூறுகிறார். ஆம்; திருமுருகனின் நிறைவையெல்லாம் சூரபதுமன் பாராட்டி விட்டு, 'மானம் ஒன்றுதான் இடையே நின்று தடுத்தது' என்றான் என்றால் அவனது உள்ளத்தை-பண்பை என்ன வென்று பாராட்டுவது?

இவ்வாறு பல்லாற்றனும் சமுதாயப்போக்குத் தழுவிய சமய காவியமான பக்திப் பனுவலை-கந்தபுராணத்தைத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவார்களாக.

கச்சியப்பர் நெறி நம் நெறி-நம்மனோர் நெறி அந்நெறி பற்றியொழுகி நாம் இன்பமும் பயனும் பெறுவோமாக!

12. அருணகிரிநாதர்

சமயத்தை சமயவழிபட்ட தத்துவத்தை, அனுபவிப்பவர்கள் - அனுபவிக்கப் பிறந்தவர்கள் மதச் சண்டைக்குப் போகமாட்டார்கள். இறைவன், சாதி, மதம், இனம், நாடு முதலியவற்றையெல்லாம் கடந்தவன், எனவேதான் மாணிக்கவாசகர், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று பாடினார். இறைவன் எங்கும் நிறைந்து பரவியிருக்கிறான். அவன் பல்வேறு நாட்டிலும் பல்வேறுப் பெயரால் பாடிப் பரவப்பெறுகிறான். அவ்வாறு பல்வேறு நாட்டிலும் பல்வேறு பெயரால் பாடிப் பரவப் பெறுகிற அந்த இறைவனுக்குத் தென்னாட்டிலே சிவன் என்று பெயர். தென்னாட்டவராகிய நாம் அவனைச் சிவன் என்ற பெயரால் அழைக்கிறோம். அவன் திருப்பெயர்களில் சண்டை சச்சரவில்லை. ஒரே குழந்தையை ஒரு வீட்டில் தாய் வேறு பெயர், தந்தை வேறு பெயர் சொல்லி அழைப்பதில்லையா? அவர்கள் இருவரும் வெவ்வேறு பெயர் சொல்லி அழைத்தாலும் அவர்கள் அழைப்பது அந்த ஒரே குழந்தையைத்தானே.