பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

249


விட முடியாதபடி-எல்லோரும் துய்த்து மகிழத்தக்க வகையிலே படைத்துத் தந்தார். இவற்றை அவர் நேரே கொடுத்தார். அறிவு, சோறு துணி இவற்றை மனிதன் மூலம் மனிதனுக்குக் கொடுக்கலாம் என நினைத்தார். மனிதன் களங்கத்தை உண்டாக்கி விட்டான்; கறைப்படுத்திவிட்டான்.

விலங்குக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா? தின்னுவதில் யானை மனிதனை வென்று விட்டது; ஊர் சுற்றுவதில் காக்கையும் நாயும் மனிதனை வென்று விட்டன; இனப்பெருக்கம் செய்வதில் பன்றி மனிதனை வென்றுவிட்டது. எனவே, எந்த வகையில் மனிதன் உயர்ந்தவன்? சிந்தனையால்தான் மனிதன் சிறந்தவனாக உயர்ந்தவனாக வாழமுடியும். அந்தச் சிந்தனா சக்திக்குத் தடை விதிக்கலாமா?

இங்கு எல்லோருக்கும் படிப்புச் சொல்லிக் கொடுத்து விட்டால் அவர்கள் பரம்பரையாகச் செய்கிற தொழிலைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்று சிலர் கூறுகிறார்கள் உழைப்புக்கும் உழைப்பவனுக்கும் மரியாதை கொடுக்காத வரை படித்தவர்கள் ஏதேனும் சிறு உத்தியோகமாக இருந்தாலும் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். யாராலே சமுதாயம் வளர்கிறது என்பதை உணர்ந்து அவர்களுக்குத் தகுதியும் மரியாதையும் கொடுத்தால் உழைப்பவர்கள் உழைப்பார்கள்.

நாட்டிலே அறிவுப் புரட்சியும், சிந்தனைப் புரட்சியும் உருவாகத் துணை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் தயவு செய்து தங்கள் தொழிலைத் தொழிலாகக் கருதாதீர்கள்; அதைத் தொண்டு என்று கருதிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் குறைந்தது நான்கு மணி நேரமாவது படித்து, நான்கு மணி நேரம் சிந்தித்து அதன் பிறகு எப்படிச் சொல்லிக் கொடுத்தால்

கு.XV.17.