பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழ்ச் சங்கங்கள்

இறையனார் களவியலை நக்கீரர் வகுத்த உரையுடன் நாம் படிக்கும் பொழுது நாம் தலை, இடை, கடைச் சங்கங்களைப் பற்றித்தான் அறிகிறோம். ஆனால் சங்க இலக்கியங்களையும், சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களையும் படிக்கும்பொழுது சங்கங்களுக்கு முந்தியும் பிந்தியும் தமிழ்நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் நடைபெற்றதற்குச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. தமிழ்ச் சங்கங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்துள்ளன. நமது வரலாற்று அறிவுக்கு எட்டிய முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் 16,500 வரை நடந்ததாகும். இது பஃறுளி ஆற்றுத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கம் நடைபெற்றதற்குச் சான்று பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறப்பாட்டாகும்.

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"

என்பன புறப்பாட்டு அடிகளாகும். வயிரியர் என்றது முத்தமிழ் வல்லாரைக் குறிக்கும் ஒரு பழஞ் சொல்லாகும். பின்னர் கி.மு. 16,000 முதல் 14,550 வரை 1450 ஆண்டுகள் நமது மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம். இது போலவே தமிழ்ச் சங்கங்கள் பல இருந்து தமிழை வளர்த்துள்ளன. பஃறுளியாற்றுத் தென்மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் வரை பதினான்கு சங்கங்களின் பணிகள் நமது அறிவுள்ளத்திற்குத் தெரிகின்றன. நாம் தெரிந்துள்ள தலை, இடை, கடைச் சங்கங்கள் முறையே ஆறு, எட்டு, பத்து என்ற எண் முறையில் அமைகின்றன. ஆனால் நாம் இன்று இன்பம் பெறுவது கடைச் சங்கத்தினாலேயாம்.