பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

307


பேரிலக்கியமெனக் கருதினர் தமிழ் மக்கள். அதனால்தான் தமிழர்கள், "இலக்கியம்" என்ற சொல்லை "இலக்கு" என்ற சொல்லிலிருந்து தொடங்கி வளர்த்துள்ளார்கள்.

தமிழிலக்கியம் காட்டும் நெறி

மக்கள் அனைவரும் ஒரே குலம் என்று பரந்து பட்ட எண்ணம் தமிழினத்திற்கே யுரிய தனித்த இயல்பு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த நாகரிகம் தமிழர் நாகரிகம். இத்தகு புனித நாகரிக வாழ்க்கையினின்றும் தமிழர் நழுவினர். அதிலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி, "மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும்” பண்பினை நல்கும் சமயத்தின் பேரால் காலப்போக்கில் குறுகிய பல சாதிப் பிரிவுணர்ச்சிகளையும் வகுப்பு வாத வுணர்ச்சிகளையும் கற்பித்துக் கொண்டனர். சமய நெறிக்குச் சாதிப்புன்மை உடன்பட்டதல்ல. மக்களினம் அனைத்தும் ஓரினம். அந்த இனத்தில் தமிழர் ஒரு குலம் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்.

"பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”

என்று கூறி, உயர்வு தாழ்வுப் புன்மைகளைப் புறக்கணிக்கிறது தமிழிலக்கியம். தமிழிலக்கியம் காட்டுகின்ற மற்றொரு பண்புநெறி இன்னாதென செய்தாருக்கும் இனியனவே செய்தலாம். "கேளிர் போலப் பயின்றோர் நஞ்சு கொடுப்பினும், உண்பர் நனி நாகரிகர்" என்று பேசுகிறது தமிழ் இலக்கியம். இப்பண்பாட்டினைத்தான் நமது திருவள்ளுவர்,

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"

என்று கூறி விளக்குகின்றார். உலகம் ஒன்றையே சார்ந்திருக்கிறது; அந்தச் சார்பு பற்றியே நிலைபெற்றும் இருக்கிறது. அந்த