பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

345


சாலையில் காட்சிப் பொருளாக வைக்கப்படவேண்டிய கூடு ஆகிவிடுவாய் என்று எச்சரிக்கின்றார்.

அடுத்து, உலகில் நிலவுகின்ற சண்டைகள், சச்சரவுகள், விவாதங்கள் ஆகியவற்றிற்கெல்லாம்.பெரிதும் அடிப்படைக் காரணமாக இருப்பது அறிவுதான் என்று கூறுவதிலே தவறிருக்க முடியாது. மனிதன், அறிவினாலே சட்டப்படி எனக்குச் சொந்தம் என்று சொல்லுகின்றான். இன்னும் பல்வேறு காரணங்களை - நியாயங்களைக் காட்டிச் சொந்தம் கொண்டாடுகின்றான். இத்தகைய உணர்வுகளையெல்லாம் அடித்துத் தொலைக்கவேண்டும் என்று சொன்னால் அது அன்பினாலேதான் முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து.

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

என்பது திருக்குறள். எல்லாம் தமக்குரியர் என்று சொல்லுகின்ற உணர்வு எங்கே தோன்றுகிறது? அன்பின்மையில் தானே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு அன்புடையவன் தன்னைத் தன் உடைமையைத் தன் வாழ்க்கையை உலக மக்கள் குலத்தின் ஆக்கத்திற்காகக் கொடுப்பான் என்பதுபோல அன்பினைப் பெரிதுபடுத்திக் கூறுகின்றார் திருவள்ளுவர்.

அடுத்து,

"அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று"

என்கிறார் திருவள்ளுவர். அன்பில்லையானால் வாழ்க்கை பாழாகிவிடும் என்பது இதன் கருத்து. இதுபோல், அறிவைப்பற்றி சொல்லும்போது, அறிவில்லையானால் உன் வாழ்க்கை பாழ்பட்டுப் போகும் - குட்டிச்சுவராகிவிடும் என்று சொல்லவில்லை. அறிவு வேண்டும் என்றார்.

கு.XV.23