பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/382

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பின்னவன் பெற்றசெல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ
என்இதின் உறுதியப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம்இன்றே
போகின்றேன் விடையும் கொண்டேன்”

என்பது கவிதை. இப்படி அவன் - இராமன் கூறியது ஒப்புக்கு உபசாரத்துக்குக்கூட இல்லை. "ஆட்சி உனக்கில்லை - நீ ஆரண்யம் ஏற்கவேண்டும்” என்ற இரண்டு அடி விழுந்த போதும், இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதுபோல மகிழ்ச்சியால் பூத்துத் திளைத்திருந்ததாம். இது எவ்வளவு பெரிய - சிறந்த பண்பு. இத்தகு மனப்பண்பு வேண்டும் என்று கூறிய கம்பன் - இத்தகு சமுதாய அமைப்பை விரும்பிய கம்பன் நமக்கு வேண்டாமா?

சமுதாய பொருளாதார வாழ்க்கையில் தான் கம்பன் முற்போக்கான கருத்துப் படைத்தவன் என்பதில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கம்பன் மிக முற்போக்கான கருத்துக் கொண்டிருந்தான்.

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலர்ள் பெண்”

என்று வள்ளுவப் பெருந்தகை பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தார். அந்த இலக்கணத்திற்குரிய இலட்சியப் பெண்ணாகச் சீதை விளங்குகிறாள்.

இராவணன் சீதையின் உடலைத் தொட்டுத் துரக்கிச் சென்றதாக வான்மீகியின் இராமகாதை பேசும். கம்பனோ சீதையின் கற்புக்கு இழுக்கு வந்துவிடக் கூடாதே என்று கருதி பாணகசாலையோடு பெயர்த்துச் சென்றதாக மாற்றியிருக்கிறான்.