பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழைத்துச் செல்கின்றன. மக்களும், தாங்கள் வறுமையின் கொடுமையினின்றும் விடுபெறப் போகின்றோம் - நல்லதொரு இன்பவாழ்வை நடத்தப்போகின்றோம் என்ற நினைப்புகள் கடவுளை மறந்து, அவர்கள் வழிச்செல்லத் தலைப்படுகின்றனர்.

முதல் சிகிச்சை

இங்ஙனம் வறுமையின் காரணமாக நேர்மைக் கோட்டினின்றும் விலகி நீதி என்ற நித்யத்துவத்தைக் கடந்து ஒழுங்கு என்ற உத்தம நெறியை இகழ்ந்து, கடவுள், மறுபிறப்பு இருவினை என்ற நினைப்புக்களைக் கனவிலும் கருதாது, தவறான வழிகளில் தேவையை நோக்கிப் போகும் சமுதாயத்தை, அன்பு வழியில் - அறத்தாற்றில் - அருள் நெறியில் - கடவுள் நம்பிக்கையில் சிறந்த பக்திப் பெரு வாழ்வில் அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களுடைய வறுமை நோய்க்கு மருந்து தேவை. அன்றாட வாழ்வில் துன்பச்சாயல் இல்லாதிருந்தால்தான் நல்லறப் பண்புகளும், நல்லொழுக்கமும், பக்தியும் வளர முடியும். துன்பத்தின் காரணமாகத் தீமை புரையோடியிருக்கும் சமுதாயத்திற்கு முதல் சிகிச்சை வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையை நிறைவு செய்வதேயாம். இம் முதல் சிகிச்சை சீர்பெற நடந்து, வாழ்க்கையில் இன்பம் மலர்ந்துவிடின் தானே கடவுள் நம்பிக்கையும், மறுமை நோக்கும், சமய வாழ்வும் குடி கொண்டுவிடும்.

இதனைத்தான் ஆந்த்ரேமோர்வா என்னும் பிரெஞ்சு நாட்டுப் பேராசிரியர் "டாக்டர் ஓ' கிரேடி மீண்டும் வருகிறார்" (The Return Dr. O'Grady)என்ற தம் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

"நல்லுணர்ச்சிகளை மனிதனிடத்தில் தூண்ட வேண்டும். தூய ஒழுக்கம், வேதாந்த ஆராய்ச்சி, மதக் கொள்கைகள் இவை பரவி மனிதனை முன்பு செம்மைப்படுத்தின.