பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துடைத்து, இன்பத்தை மலரச் செய்து, அதன் மூலம் சமய வாழ்வை மக்கள் மனதில் இடம்பெறச் செய்வதாகும்.

வினோபாஜியின் வேள்வி

சமுதாயத்தின் துன்பத்தைப் பரிபூரணமாகத் துடைக் கின்ற திருத்தொண்டிலே காந்தியத்தின் வழி வினோபாஜி ஈடுபட்டார். மக்கள் மனத்தில் அன்புவித்திட்டு மன மாற்றத்தை உற்பத்திசெய்து நிலத்தானம் பெற்று, வாடுகின்ற ஏழைகளுக்கு நிலத்தை அளிக்க முன்வந்தார். இச்செய்தியைக் கேட்ட ஏழை மக்களின் முகத்திலே மகிழ்ச்சி மலர்ந்தது. கொடிய கொலைக்களத்தில் படைக்கலம் தாங்கி நின்றவர்களும் அன்பு வழியில் மாறியதை ஹைதராபாத்தில் கண்டோம். அரசியல் கலப்பில்லாது, சமுதாயத்தை உயர்த்தும் ஒப்பற்ற அருள்நெறி இயக்கம் இது என்று நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம். பூமி தானத்தின் மூலம் வறுமையின் வாட்டம் தவிர்க்கப்படுகிறது. துன்பம் துடைக்கப்படுகின்றது. வெறுப்புணர்ச்சி விடைபெறுகிறது. கொலை, புலைத் தன்மைகள் புறம்போகத் தலைப்படுகின்றன. இவற்றின் பயனாக மக்களிடையே சமய நம்பிக்கையும் வாழ்வும் இடம்பெறுகிறது. இந்த இயக்கத்தை ஆண்டவனின் துரண்டுதலின் பேரில்தான் தொடங்கினேன் என்று வினோபாஜி சொல்லியுள்ளதே இதற்குச் சான்றாகும். வினோபாஜியின் வேள்வி அருள் ஒழுக்கத்தின் எதிரொலி, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பண்பின் வழி நின்று ஈகைத் தன்மையைப் பெருக்கி இன்பத்தை விளைவிக்கிறது.

நம்முடைய ஆதரவு
மக்களிடையே சமய உணர்ச்சியை வளர்த்து, நல்லறச் செல்வர்களாக வாழ்விக்கும் பொறுப்பு நாம் வகிக்கும் ஸ்தானத்திற்கு உரிய தலையாய கடமையாகும். மக்களின்