பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


22. புதிய சமுதாயம்

கால வளர்ச்சியில் மனித குலம் வளர்ந்திருக்கிறது. அப்படி வளர்வதென்பது இயற்கை வள்ளுவரும் அப்பரடிகளும் சேக்கிழாரும் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு மனிதகுலம் வளரவில்லை என்ற கூற்றினை ஒப்புக்கொண்டு விடுவதற்கில்லை. இன்று பல்வேறு நாட்டுப் பேரறிஞர்களின் சிந்தனைகளும், கருத்துச் செல்வங்களும் இங்கு வந்து குவிந்திருக்கின்றன. இப்படி வளர்கின்ற - வளர்ந்து வருகின்ற - புதிய சமுதாயத்தோடு நாமும் நமது வாழ்க்கையை இணைத்துக் கொள்ளாவிட்டால் காலப் போக்கில் நாம் ஒதுங்குவோம் - ஒதுக்கப்படுவோம்.

"முன்னைப் பழம் பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும்
பேர்த்துமப் பெற்றியனே"

என்று இறைவனை ஏற்றிப் போற்றுகிறது திருவாசகம், அந்தத் திருவாசகத்தைப் பாடிப்பரவி வருகிற பல அன்பர்கள் கூடப் பின்னைப் புதுமையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் - மறுக்கிறார்கள். எனவேதான் நமது சமயம் உலகப் பெருஞ்சமயமாக ஆகவில்லை. வளர்ந்து வாழவேண்டிய - சமுதாயத்திற்குக் கருத்துப் புரட்சி இன்றியமையாததாகும்.

வாழ்க்கை ஒரு பெரும் போராட்டம். மனிதன் காலை எட்டு மணிக்குக் கொள்ளுகின்ற கோலமும் கருத்தும் மாலை எட்டு மணிக்கு அப்படியே இருப்பதில்லையே. எனவேதான் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. நூல் சுருளில் ஏற்படுகிற சிக்கலை எடுப்பதில் கூட மனிதர்கள் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்; வாழ்க்கையில் ஏற்படுகிற சிக்கலை நீக்குவதில் பெரும்பாலானவர்கள் அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை.