பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

35


வாழ்நிலைப் போக்குகளே வரலாற்றுக்கு கரு. இந்தியாவில் வழி வழியாகப் பின்பற்றி வந்த கல்வியில் "இந்த இரண்டு சாதி முறை” உயிர்ப்பிக்கப்பெற்றுள்ளது என்ற துன்பியல் செய்தி யாருக்குத் தெரியும்? ஆதலால், மக்களை மையமாகக் கொண்ட வரலாறு கற்பிக்கப் பெறுதல் வேண்டும்.

பொருளாதாரக் கல்வியில் புதுமை தேவை

மாமுனிவர் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூல் மனிதகுல வரலாற்றினைக் கவனமாகக் கற்றதன் பயனேயன்றோ! இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்? பிரிவினைகள்? பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்? இந்தத் தவறுக்குக் காரணம் வரலாற்றுப் போக்கில் சமுதாயத்தில் ஏற்பட்ட ஆதிக்கம்தான்! "வல்லாண்மையுடையது வாழும்” என்ற நியதி, ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்! வலிமையில்லாததற்கு வலிமை தருவது எப்போது? வாழ வைப்பது எப்போது? வல்லாண்மை உடையது வாழும் - இது இயற்கையின் நியதி! வல்லாண்மை இல்லாததும் வலிமை பெறமுடியும்; வாழ முடியும் என்ற சமூக நீதி வெற்றி பெறத் தக்க கல்வி, மாணவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

இன்று இந்தியா கூட 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் வகுத்துக் கொண்ட - எடுத்துக் கொண்ட பொருளாதாரக் கொள்கையிலிருந்து தடம் மாறிச் செல்கிறது. அதாவது, நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கலப்புப் பொருளாதாரமாகும். அதாவது நமது அரசின் பொருளாதாரக் கொள்கை தனியாருக்கு விரோதமானது அல்ல. ஆனால் அரசு, பொதுத்துறையை, கூட்டுறவுத் துறையை ஊக்குவித்து வளர்த்து ஆக்கம் சேர்க்கவேண்டும் என்பதாகும். இன்று இந்திய அரசு புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரால் தனியார் துறைக்கு அதிக ஊக்கம் தர எண்ணியுள்ளது. எப்படியிருந்தாலும் தனியார்துறை இலாப நோக்குடையதுதான்! அதில் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயந்திரமயப்படுத்துவார்கள். வேலை வாய்ப்புகள் குறையும்.