பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

47


களுக்கு வழங்கப்பெறும் கல்வி, ஆய்வு மனப்பான்மையைத் தூண்டி வளர்ப்பதாக அமையவேண்டும். சிறப்பாக மாணாக்கர்கள் அவர்கள் காணும் சமூக அமைப்பு, கலாச்சாரம், உற்பத்திப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம், சமூக மாற்றத்துக்குத் தேவையான ஆயத்தங்கள் முதலியன பற்றி ஆய்வு செய்தல் பயனுடையதாக அமையும். இத்தகு சிறந்த கல்வி கற்ற சமுதாயம் அமைய வேண்டுமானால், ஆரம்பக் கல்வி, அதாவது தொடக்கக் கல்வி நிலையிலேயே கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.

ஆரம்பப் பாடசாலைகள் திருத்தம் பெறவேண்டும்

இன்றைய நமது நாட்டு ஆரம்பக் கல்விநிலை பரிதாபகரமானது. மாணாக்கர்கள் விரும்பி ஆர்வத்துடன் கற்கத்தக்கதாக ஆரம்பக் கல்வி அமையவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை! இன்றைய ஆரம்பக் கல்வியில் கற்பிக்கும் திறன், ஆரம்பப் பாடசாலைகளின் சூழ்நிலை இவற்றை உடனடியாக மேம்படுத்துதலுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும். ஆரம்பக் கல்வி, உயிர்ப்பும் அழகும் கவர்ச்சியும் இயற்கைச் சூழலும் உடையதாக அமையவேண்டும். கற்பிக்கும் சாதனங்கள் தேவையான அளவு இருக்க வேண்டும். இன்று 90% ஆரம்பப் பாடசாலைகளில் போதுமான கல்விச் சாதனங்கள் இல்லை! கரும்பலகை வசதிகூட இல்லாத பள்ளிக்கூடங்கள் பலப்பல. தொடக்கக் கல்வி வழங்கும் பள்ளிகளின் வகுப்பறை பாவம், துக்கமும் ஆற்றாமையும் சோம்பலும் படர்ந்ததாக இருப்பதை இன்றும் காணலாம். அதுமட்டுமா? ஆரம்பப் பாடசாலைகளில் வகுப்புக்கு ஓர். ஆசிரியர் என்ற நியதிகூட நடைமுறையில் இல்லை. பல ஆரம்பப் பாடசாலைகளில் முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்புகள் வகுப்பறைகளாக இருப்பதில்லை! சிறுவர்களை அடைத்து வைக்கும் கொட்டடிகள் போல இருக்கின்றன.