பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேளாண்மை, கால்நடை வளர்த்தல், முதலிய தொழிற் பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுதல் அவசியம். இவை பாடத்திட்டத்தில் சேர்ந்தால்தான் வேளாண்மை, கால்நடை வளர்த்தல் முதலியவற்றில் அலட்சியப் போக்கு இல்லாமல் ஆர்வம் காட்டுவர். வளரும் இளம் பருவத்தில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் பெறும் கல்வி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் மாணாக்கனின் - இளைஞனின் முழுத் திறமையையும் வளர்க்கும் முயற்சி தேவை. மாணாக்கனுக்குச் செயல் திறமையுடைய கல்வி தேவை என்பதை அறிக.

ஆண் - பெண் சேர்ந்து பயிலவேண்டும்

உயர்நிலைக் கல்வியில் நமது நாட்டில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்களே தேவை. இத்தகு கூட்டுக் கல்வி முறையிலும் ஒரோவழி சில தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. என்றாலும் விளையும் பயன் மிகுதி என்பதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியே பிரித்து வைக்கும்பொழுது தோன்றும் கவர்ச்சி, ஆர்வம் ஒன்றாகப் படிக்கும்பொழுது தோன்றுவதில்லை. கூட்டுக் கல்வியில் பழகும் வாய்ப்புக்கள் இருப்பதால் கவர்ச்சி வயப்பட்ட ஆர்வம் குறைகிறது. வாழ்க்கையின் பிற்காலத்திலும் சமநிலை உணர்வு கால்கொள்கிறது ஏன்? தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. திருமணங்கள் "செய்து" வைக்கப்படும் வரையில் வரதட்சணைக் கொடுமை நிலவும். திருமணங்கள் நிகழவேண்டுமே தவிர, செய்து வைத்தல் கூடாது. இதுவே மரபு இயற்கை நியதியும்கூட.

பல்வகைப் பணிக்கல்வி

உயர்நிலைக் கல்வியில் மாணவர் அவை அமைத்துப் பள்ளியின் பணியை மேலும் பகிர்வு செய்து அளிக்கலாம்.