பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

53


கல்வி தருவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்ற கருத்து உருவாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய உயர்நீதி மன்றமும் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வாங்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. இஃதொரு திருப்புமையம்; வரவேற்கத்தக்க நடைமுறை மாற்றம்.

நிதி உதவி வேண்டும்

கல்வி நிறுவனங்கள் முறையாக வளர, நிறைய நிதி தேவை. கடந்த பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நிதி போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இதே நிலைதான். அரசு போதுமான நிதியளிக்க முன் வராததால்தான் நன்கொடை வாங்கும் பழக்கம் கால்கொண்டது என்பதை நினைவுகூர்தல் வேண்டும். ஆதலால், அரசு போதுமான நிதி உதவி செய்யவேண்டும். பெற்றோர்களும், சமூகமும்கூட நிதி வழங்க முன்வரவேண்டும். சமூகத்தில் பணம் இல்லாமல் இல்லை. மக்கள் மதம், அரசியல் பெயரில் எவ்வளவோ செலவழிக்கிறார்கள். ஏன், பள்ளிக்குத் தமது மக்கட் செல்வங்களின் எதிர்கால மேன்மைக்குச் செலவழிக்கக்கூடாது? கல்விக்குச் செலவழிக்கும் பணம் உண்மையில் செலவு அல்ல. அஃதொரு வகையான முதலீடு என்று பெற்றோர்கள் கருத வேண்டும்; அரசும் கருதவேண்டும். இது மிகவும் குறைந்த செலவில் தேசத்தைக் காக்கும் பணியுமாகும் என்பதை ஆள்பவர்கள் உணர்தல் வேண்டும்.

அரசு தலையீடு கூடாது

அரசு நிதி உதவி செய்யும் ஒரே காரணத்திற்காகப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் நிர்வாகத்தில் - குறிப்பாக பாடப்புத்தகக் குழு, பாடப் புத்தகங்கள் தேர்வு செய்வதிலும், ஆசிரியர் தேர்விலும், தலையிடக்கூடாது. அப்படித் தலையிட்டால், கல்விப் போக்கு அடிக்கடி மாறும்.