பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று இன்றைய மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆசிரியர்கள்

கல்வியியலில் ஆசிரியருக்கு உள்ள பொறுப்பும் பங்கும் அளவிடற்பாலதன்று; மகத்தானது. ஒரு மாணாக்கனது வாழ்க்கையை உருவாக்குவதில் ஆசிரியர் பூரணப் பொறுப்பை ஏற்கிறார். அவ்வழி நாட்டை வளர்ப்பதிலும் பங்கேற்கிறார். ஆதலால், சமூகத்தில் ஆசிரியருக்குத் தகுதியான ஓர் இடத்தை அளித்தல் அவசியம், ஆசிரியர் மதிக்கப்படுதல் வேண்டும். ஆசிரியர்களை அவர்களுடைய கற்பித்தல் பணியில் ஊக்கப்படுத்தும் முயற்சி, பெற்றோர்கள் பக்கலிலிருந்தும் அரசுச் சார்பிலும் தேவை. ஆசிரியர்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பெறுதல் வேண்டும். ஆசிரியர், சமூகத்தால் உரியவாறு பேணப் பெறுதல் வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்கள் தமது பங்கை உரியவாறு சமுதாயத்திற்குச் செய்யமுடியும், கல்விப் பண்பும் வெற்றிகரமாக அமையும்.

ஆசிரியர் – மாணாக்கர் உறவு

மாணாக்கர்கள் - ஆசிரியர் உறவு நல்ல வண்ணம் அமைதல் வேண்டும். இன்று நமது நாட்டில் மாணாக்கர் - ஆசிரியர் உறவு போதிய அளவு இல்லை. மாணாக்கர்கள் நலனில் போதிய அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இல்லை என்றே கூறலாம். தப்பித்தவறி ஓரிருவர் இருந்தால் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்! மாணாக்கர்கள் - ஆசிரியர் உறவு மிகவும். கவனமாகப் பேணப்படவேண்டிய ஒன்று. பொதுவாக மாணாக்கர்கள் தம்பால் அக்கறை காட்டும் ஆசிரியர்களையே விரும்புகிறார்கள். வகுப்பறையில் எடுத்த எடுப்பிலேயே பாடத்தைத் தொடங்காமல் சில நிமிடங்கள் அன்பு கெழுமிய, அகநிலை தழுவிய உறவு வளர்க்கும் உரையாடல்கள், நிகழ்வுகள் நிகழ்த்தியபிறகு பாடம் நடத்துதல்