பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

137


கந்தசாமித் தம்பிரான் உணர்ந்தார். விண்ணப்பங்களையும் திட்டங்களையும் படித்த பிறகு மகாசந்நிதானம் திருக் கண்களிலிருந்து இரண்டொரு சொட்டு நீர் விண்ணப்பத் தாள்களில் வீழ்ந்தன. நாத்தழுதழுத்தார்கள். அனைத்து விண்ணப்பங்களும் உடன் அங்கீகரிக்கப் பெற்றன. 'திருவிழாவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்' என உத்தரவாகியது.

மிக்க மகிழ்ச்சியுடன் சீகாழிக்கு வந்து ஐயங்காரை முடுக்கிவிட்டுப் பணிகளைச் செய்து முடிக்க ஏற்பாடு செய்யப்பெற்றது. திருக்கோயில் விமானம், மதிற்சுவர்களில் முளைத்துள்ள செடிகளை வெட்ட வேண்டும். உடனே கந்தசாமித் தம்பிரான் சில இளைஞர்களையும் மாணவர் களையும் தேர்ந்தெடுத்தார்.

அவர்களுள் கவனத்துக்குரியவர் திருமுறைச் செல்வர் புலவர் மு. கணபதி! இன்று பட்டிமண்டபங்களில் முழக்கம் செய்து வருகிறாரே அந்த கணபதிதான், இவர். மு. கணபதி, சிதம்பரத்தில் பிறந்தவர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருப்பனந்தாளில் தமிழ் பயின்று கொண்டிருந்த காலத்தில் மகாவித்வான் சா. தண்டபாணி தேசிகருடனும் தனியாகவும் அடிக்கடி தருமபுர ஆதீனத்துக்கு வருவார். அவர் தமிழில் மட்டும் புலவர் அல்லர். நல்ல ஓவியருமாவார். தருமபுர ஆதீனம் 'ஞானசம்பந்தம்' இதழுக்கு ஓவியங்கள் தீட்டிக்கொடுப்பார். வழக்கம் போல மு, கணபதியிடம் கந்தசாமித் தம்பிரான் நட்புறவு கொண்டார். பணி கருதி இவர் அவசரத் தந்தி மூலம் வரவழைக்கப்பெற்றார்.

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் பயின்ற புலவர் வை. சு. தண்டபாணி, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் ஓதுவார் மிராசு, புலவர் தா. குருசாமி ஆகியோரை கந்தசாமித் தம்பிரான் சீகாழிக்கு வரும்போதே பணிக்கு அழைத்து வந்து விட்டார்!

கு.XVI.10.