பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

157


சென்றிருந்தோம்! புகை வண்டிப் பயணம். பேசிமுடித்து விட்டு அன்று இரவே பயணமாகி காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். ஆதீன மடத்துக் கார் வரவில்லை, அலுவலகத்தைச் சேர்ந்த எழுத்தர் சா. சொக்கலிங்கம் என்பவர் மட்டும் வந்திருந்தார். இவரும் ஆதீனச் சார்பிலோ மகாசந்நி தானத்தின் உத்தரவுப்படியோ வரவில்லை. இவர் நம்மால் பணியில் சேர்க்கப் பெற்றவர். அந்த நன்றி உணர்வில் வந்திருந்தார். இவர் நம்பால் நல்லன்பு கொண்டவர். இவர் இப்போது ஆதீன அலுவலகத்தில் வருவாய்த் துறைப் பொறுப்பாளராகப் பணி செய்கிறார். பணி செய்வதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவர். -

ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு இருவரும் குன்றக்குடி வந்தோம். காரில் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமே! குன்றக்குடி வந்தவுடன் பூஜை மடத்தில் வழிபாடு நிகழவில்லை என்பதை அறிந்து, வழக்கம் போல் நாம் வழிபாட்டுக்குச் சென்றோம். வழிபாடு முடிந்தவுடன் சொக்கலிங்கத்தை தனிமையில் அழைத்து, "என்ன நடந்தது?" என்று கேட்டோம்! சா. சொக்கலிங்கம், "மகா சந்நிதானத்துக்குக் கோபம் வந்திருக்கிறது. செட்டில் மெண்ட்டை ரத்து செய்ய மதுரை சென்றிருக்கிறார்கள்" என்று சொன்னார். இந்தச் செய்தி நம்மைப் பாதிக்கவில்லை. இந்த உலகத்தில் இன்பம் மட்டுமா உண்டு; துன்பமும் உண்டு! இனிமையும் உண்டு! கசப்பும் உண்டு! இனிமையையும் கசப்பையும் சேர்த்து விழுங்குவதுதான் ஒழுக்கம். முதல் நாள் இரவு கண்விழிப்பு. ஆதலால் தூங்கச் சென்றுவிட்டோம். நிம்மதியாகத் துங்கினோம்! மாலைப் பொழுதாகி விட்டது. மகாசந்நிதானம் மதுரையிலிருந்து வரவில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் வந்தார்கள். ஆதீனமடம் வழக்கம்போல் இருந்தது. நாம் தங்கியிருந்த அறைக் கதவை இரவு பத்து மணிக்கு ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் தட்டினார்.