பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சோறு படையல் போட்டு அந்த ஆவி, சுவாமி மீது படும்படி கதவைச் சாத்துகின்றனர். இது தவறான முறை. நமது புராணச் சடங்குகள் பலப்பல சொற்களையும் பிழைபடப் பொருள் கொண்டு தோன்றிய இவை தவிர்க்கப்படுதல் வேண்டும்.

இத்திருத்தலத்துக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்துகொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் திருக் கோயிலுக்கு எதிரிலேயே கறுப்புக்கொடி பறந்தது கண்ணில் பட்டது. சோதியனே! துன்னிருளே! என்ற திருவாசக அடி களை அடிமனம் சிந்தித்தது. ஆவுடையார் கோயில் நண்பர் முத்துதேசிகர், திராவிடர் கழக நண்பர்களை அழைத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பெற்றார். முத்துதேசிகர் ஆவுடையார் கோயில் கிராம ஹெட்மேன், இனிய அன்பர். நல்ல வண்ணம் உபசரிப்பார். அருமையாகத் திருவாசகம் பாடுவார். முத்துதேசிகர், திராவிடர் கழக நண்பர்கள் சிலருடன் வந்து சேர்ந்தார். இரவு 8 மணிக்கு உட்கார்ந்து அவர்களுடன் பேசத் தொடங்கினோம். இரவு 2 மணிவரை பேச்சு நீண்டது. வினாக்களும் விடைகளும் பரிமாறிக் கொள்ளப்பெற்றன. பேச்சின் முடிவு திருக்கோயில் எதிரில் உள்ள திராவிடர் கழகக் கருப்புக் கொடியை அகற்றிவிடுவது. அருள்நெறித் திருக்கூட்டப் பணிகளுக்கு ஒத்துழைப்பது' என்பது. மறுநாள் காலை திருக்கோயில் முன் உள்ள திராவிடர் கழகக் கொடி இறக்கப்பெற்றது.

இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அறந்தாங்கி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து தி. க. அன்பர்கள் மீண்டும் திராவிடர் கழகக் கொடியை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நமது அணியைச் சேர்ந்தவர்கள் மறுக்கின்றனர். மதுரையில் மேடை ஒன்றில் பேசிக் கொண்டிருந்த நமக்கு உடன் தகவல் தந்தனர். நாம் உடனே கூட்டத்தை முடித்துக் கொண்டு தேவகோட்டைக்கு போய் வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பனை அழைத்துக் கொண்டு ஆவுடையார் கோயில்