பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

193


நம்பிக்கையூட்டும் விழா!" என்றார். அண்மைக்காலமாக இத்தகைய சமுதாய நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. இது வளர்ச்சிக்கு உதவி செய்யாது. திருமண மேடைகள் தனிக் கட்சி மேடைகளாவதைத் தவிர்க்க வேண்டும். பலரும் பங்கேற்கும் சமுதாய விழாவாக நடத்தப்பட வேண்டும்.

திண்டுக்கல்லில் மாணிக்க நாடார் நல்ல செல்வாக் குள்ள மனிதர். அவர் பெரியார் சிலை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திராவிடர் கழகக் கொள்கையில் பிடிப்புள்ளவர். இது இனவழிப் பற்றேயாம். சமய எதிர்ப்பாளர் அல்லர் - நம்மிடத்திலும் அன்புடையவர், பெரியார் சிலையைத் திறந்து வைக்க நம்மை அழைத்தார். அப்போ தெல்லாம் பெரியார் சிலையின் அடியில்-

'கடவுள் இல்லை:

கடவுளைப் படைத்தவன் முட்டாள்

என்றும், இவற்றைப் போல மேலும் சில வாசகங்களும் பொறிக்கும் பழக்கம் இருந்தது. இதைக் காரணம் காட்டி இயலாமையை எழுதினோம். மாணிக்க நாடார் பெரியாரைக் கலந்ததில் "மகாசந்நிதானம் விரும்ப வில்லையென்றால் பொறிக்க வேண்டாம். அவர்கள் விருப்பப்படி செய்க!” என்று உடனடியாகப் பெரியார் பதில் எழுதிவிட்டார். கடவுள் மறுப்பு வாசகம் இல்லாமலேயே திண்டுக்கல்லில் பெரியார் சிலை நம்மால் திறந்து வைக்கப் பெற்றது.

பெரியார் மறைவு நமக்கு ஆற்றொனாத் துயரத்தைத் தந்தது. சமுதாயக் கலவரங்கள், தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றால் நெருக்கடி நேரும்போதெல்லாம் பெரியார் இல்லாத குறையை உணர்வது உண்டு. நினைந்து வருந்துவ துண்டு. அந்த இடத்தை யாரால் நிரப்ப இயலும்?