பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெய்யப்பனைச் சில நாட்களுக்கு முன்பே இலங்கைக்கு அனுப்பி, மாநாட்டு ஏற்பாடுகளை அறிந்து கணித்து அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் பெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுவினர் நம்முடைய வருகையை விளம்பரப்படுத்தினர். ஆனால், யாழ்ப்பாணத்துக்காரர் யாரையும் அழைக்கவில்லை. எனவே, நாமும் மாநாட்டுக்குச் செல்லவில்லை. - -

அடுத்து முயன்றவர் பாராட்டுதலுக்கு உரிய இலங்கை அரசின் கிராமத் தொழில் அமைச்சர் தொண்டைமான், அமைச்சர் தொண்டைமான் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர். நமக்கு மிகவும் வேண்டிய குடும்பம். அமைச்சரின் முழுப்பெயர் செளமியநாராயணத் தொண்டைமான். திருக் கோட்டியூரில் எழுந்தருளியுள்ள அருள்திரு செளமிய நாராயணப் பெருமாள், தொண்டைமானின் குலதெய்வம். நாம் இலங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதெல்லாம் மலைப் பகுதியில் அமைச்சர் தொண்டைமானும் அவர் இளவல் குமாரவேலுவுமே பயண ஏற்பாடுகளைச் செய்வார்கள். இவர்களுடைய வளமனைகளிலேயே தங்கும் பழக்கமும் உண்டு. அமைச்சர் தொண்டைமான் நல்ல அரசியல் தலைவர், நிர்வாகி,

இவர் தமது அரசியல் வாழ்வின் பொன்விழாவைக் கொண்டாட அழைத்தார். நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டோம்! என்ன நிபந்தனை? இலங்கையில் இனக்கலவரம்! மூண்டு எரிந்துகொண்டிருந்த நிலை I.P.K.F. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நிலை! யாழ்ப் பாணத்தில் நமக்கு நல்ல உறவு உண்டு. இனக்கலவரத்தால், யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நாம் கொழும்புக்கு வந்து மீள்வது முறையன்று. யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று அந்த மக்களைப் பார்த்து ஆறுதல் கூற வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்தால் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறினோம்.