பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

211


எஸ்.என். அம்பலவாணன் பிள்ளை இணைச் செயலாளர். நல்ல உழைப்பாளி. இயக்கப் பணிகளைப் பொறுப்புடன் செய்தவர். இவருடைய அருமைப் புதல்வர் நமசிவாயம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி செய்கிறார். பழகிய பழக்கம் விட்டுப் போகவில்லை. உறவுகள் பராமரிக்கப் பெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில்தான் அருள்நெறி இயக்கம் நாலாந்தர மட்டத்தில் உள்ள மக்களுக்கும் சென்றது. இப் போதைய மாவட்டத் தலைவர் ப. மூக்கப்பிள்ளை, இவர் சிவபூஜை செல்வர். பழந்தமிழகத்தின் கணக்காயரை நினைவூட்டும் வகையில் படித்தவர். பண்ணோடு திருமுறை பாடுவார். விகற்பம் இல்லாது பழகுபவர்; இவருடைய முயற்சியால் திருச்சி கைலாசபுரத்தில் அருள்நெறித் திருக் கூட்டம் தோன்றி நாளும் நல்ல பணிகளைச் செய்து வருகிறது. இப்போதைய திருச்சி மாவட்டச் செயலாளர் மா. சொக்கையன் நல்லவர். இவருக்குச் சேக்கிழார் மீது ஈடுபாடு. சேக்கிழார் மண்டபம் கட்ட ஆசை! நாம் மறுத்தோம். ஆனாலும் அவர் விடாப்பிடியாக அடிக்கல் போட்டார். சேக்கிழார் மண்டபம் எழவில்லை. விநாயகர் கோயிலே தோன்றியுள்ளது. ஏன்? சேக்கிழார் மண்டபம் வேண்டாமா, சேக்கிழார் திருத்தொண்டர்களின் புகழ்பாடிப் பரவியவர்; திருத்தொண்டின் நெறி வாழப் பெரிய புராணம் செய்தவர். சேக்கிழாருக்கு உண்மையான நினைவுச் சின்னம் சேக்கிழார் பாடிப் பரவிய திருத்தொண்டர்களின் திருத்தொண்டுகளை நமது தலைமுறையிலும் செய்தலே!

1972-ம் ஆண்டு மகாசிவராத்தியன்று இரவு நாயன்மார் அடிச்சுவட்டில் என்னும் திருத்தொண்டு வழிகாட்டிக் கையேடு எழுதப்பெற்றது. இது திருத்தொண்டு செய்வோருக்கு வழிகாட்டும்!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவமனை. இந்த மருத்துவமனையை நிறுவி