பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிலர் அதிர்ஷ்டத்தை நம்பி உழைப்பில் சோர்கின்றனர். அல்லது உழைப்பைக் கை விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. அதிர்ஷ்டத்திற்கே உழைப்புத்தான் வாயில் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

நம்மைச் சூழ்ந்து வரும் கவலைகளிலிருந்து விடுதலை பெற, உழைப்பே சாதனம். கவலையற்றவராகவும், மகிழ்ச்சியுடையவராகவும், நல்லவராகவும் வாழ்வதற்கு உழைப்பே துணை; சாதனம்.

எழுக! விழித்தெழுக! கடின உழைப்பிற்கு ஆயத்த மாகுக! உழைப்பே வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தெளிக! நாளும் பயனுள்ள வகையில் உழைத்திடுவோம்! வாழ்க்கை பயனுறுதல் வேண்டும். உழைப்பு, படைப்புக்குப் பயன்படுதல் வேண்டும்.

இந்தியாவை நாடா வளத்ததாக உருவாக்கும் உழைப்பினை அனைவரும் மேற்கொள்வோம்! உழைப்பை உயர்வு செய்வோம்! உழைப்பாளிகளைப் போற்றுவோம்! உழைத்து வாழ்வதே வாழ்வு என்ற திசையில் செல்வோம்!

நாம் இப்போது செல்லும் பாதை - தடம் - உழைப்பின்றியே பணம் படைக்கும் முயற்சி! சுரண்டும் பொருளாதாரக் கொள்கைத் தடம்! இந்தத் திசை நலம் தராது! உழைப்பு - பூரண உழைப்பு என்ற தடத்தில் செல்வோம்! உழைப்போம்! உற்பத்தியைப் பெருக்குவோம்! உழைத்து வாழ்தல் பண்பாடு; நாகரீகம்!

4. வளர்ச்சி - மாற்றம்
(3-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மனிதகுலத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்குரியது. மாற்றத்திற்குக் காரணம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு உந்துசக்தி - ஒன்று, காலத்தின் பரிணாம வளர்ச்சி. பிறிதொன்று மாற்றம்.