பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

343



மனிதகுலத்தின் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்தது. இது தவிர்க்க முடியாதது. அணுவைப் பிளக்கும் இந்த யுகத்தில் நம்முன் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நேற்றைய சம்பிரதாயங்களின் வழி தீர்வுகாண இயலாது. மதவிவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள், பிரச்சாரப் போரின்றி, சந்தடியின்றி முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

எத்துறையேனும் சரி, அத்துறை, பிரசாரப் போரைத் தொடங்கிவிட்டால் பயமும் குரோதமும் வளரும். அதனால், மனிதகுலத்தின் வளர்ச்சியும், வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பும் கிடைப்பதற்குப் பதிலாக, அபாயங்களும் விபத்துக்களுமே அதிகரிக்கிறது.

ஆதலால், பழமைவாதம், பிரச்சாரப்போர் ஒருபோதும் வளர்ச்சிக்குத் துணை செய்யாது, என்பதை உணர்தல் வேண்டும். மனிதகுலத்தில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத் திட்டமான இலக்குகள் வேண்டும். அந்தத் திட்ட இலக்குகளை அடைவதற்குரிய அறிவறிந்த ஆளுமையும் வேண்டும்.

மக்கட் சமுதாயத்தில் வர்க்கப் போராட்டங்கள் நிலவுகின்றன. வர்க்கப் போராட்டங்கள் மூலம்தான் வளர்ச்சியைக் காணமுடியும்; வளர்ச்சியை உறுதிப்படுத்தி உத்தரவாதம் தரமுடியும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் பெரு முயற்சி எடுத்துக் கொண்டால் வர்க்கப் போராட்டம் இல்லாமலே கூட அமைதி வழியில் வளர்ச்சியைக் காண முடியும்.

தமிழக வரலாற்றில் நடைபெறும் ஒரு பெரிய விவாதம் மரபு-புதுமை என்பது. மரபு, புதுமைகளுக்கிடையே மோதல் இயல்பாக நிகழாது, நிகழவும் கூடாது. இன்றைய புதுமை, வளர்ச்சிக்குரிய வித்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பின்