பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தக் கருத்துரைத் தொடரின் மூலம் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி எவ்வளவு? எத்தகையது? என்று கணக்கிட முடியவில்லை

மதுரை அன்பர் ஏ.எஸ்.கே. ஒவ்வொரு பேச்சுக்கும் வினாக்களை எழிப்பியிருந்தார். அர்த்தமுள்ள வினாக்களாக எழிப்பியிருந்தார். அவருக்கு நன்றி! அதுபோல திருப்புன வாசல் இளைஞர்கள் கூடியிருந்து கேட்டுள்ளனர். வினாக்களும் எழுதியுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள். வானொலி நிலையத்தாருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் நன்றியை வார்த்தைகளால் கூறாமல், வானொலி நிலையத்தினர் நமக்குப் பல விதங்களில் சிந்திக்கும் வாய்ப்பு அளித்து வருவதை நினைந்து, திருக்குறள் வழியில் அவர்களுக்கு நன்றியறிதலுடன் வாழ்தல் நமது கடைமை.

எங்கே போகின்றோம்? வாழ்க்கை ஒரு பயணம்; நெடிய பயணம் போலத் தோற்றமளித்து குறுகிய காலத்தில் முடியும் பயணம்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"

என்று திருக்குறள் கூறும். வாழ்க்கையில் இளமையில் பிழைகள் நேர்ந்தால் வாழ்க்கையின் நடுவில் போராட்டங்கள் அமையும்; வாழ்க்கையின் முடிவில் கழிவிரக்க நிலை தோன்றும். இந்த அவலத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? எங்கே போகிறோம்?

எது நமது வாழ்க்கையின் குறிக்கோள்? "மானுடம்" அற்புதமான பிறவி! நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்திற்காக மட்டுமா இவ்வளவு பெரிய மானுடப் பிறவியை இறைவன் வழங்கியிருப்பான்? தான் உண்டு, தான் வாழ்தல் அவசியம்; திருமணம் நிகழ வேண்டும்; வாழ்தல் வேண்டும்; அடுத்த தலைமுறைகள் தோன்ற வேண்டும்; எல்லாம் நடக்க வேண்டும்; நன்றாகவே நடக்க வேண்டும்.