பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

105


புரட்சிக்குப் பிறகுதான், உலகமெங்கும் விடுதலை முழக்கம் கேட்டது.

மக்கள் அரசியல் விடுதலை பெற்றாலும், வேறு விதமான சமூக ஆதிக்கங்கள் இருக்கவே செய்தன. அதாவது, பொருளாதார ஆதிக்கங்கள், மத, சமூக, ரீதியான கட்டுப்பாடுகளின் வழி மேலாதிக்கம் செய்து வந்தன. சமூகப் பொருளாதார ஆதிக்கத்தையும், மனித குலம் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

சமூகப் பொருளாதார ஆதிக்கங்களை எதிர்த்துக் கார்ஸ் மார்க்ஸ், மிக அருமையான ஒரு மனித இயல் விஞ்ஞான நூலை "மூலதனம்" என்ற பெயரில் தந்தார். கார்ல் மார்க்ஸ் தந்த 'மூலதனத் தத்துவத்தின்' அடிப்படையில் இலெனின் 1917-இல் சோவியத் புரட்சியைச் செய்து வெற்றி பெற்று ஏற்றத் தாழ்வற்ற-ஒப்பற்ற சமுதாயத்தை அமைத்தார். சோவியத்துப் புரட்சிக்குப் பிறகு உலக சமூகத்திற்குச் சோஷலிசம் என்ற ஒரு சமூகக் கொள்கை கிடைத்தது.

இன்றைக்கு இந்திய நாட்டில் சோஷலிசம் என்ற சித்தாந்தத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் பேசுகின்றன.

1955-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் உலகில் சோஷலிசம் என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை; மேடையில்லை. ஆனாலும் சோஷலிசத்தைப் பற்றித் தெளிவான கருத்து நமக்குக் கிடைக்க வில்லை. மேலும் நமது தமிழ்ச் சமுதாயம் வழி வழி வளர்த்து வந்துள்ள வாழ்வியல் மரபிற்கு இந்தச் சோஷலிசத் தத்துவம் இசைவு உடையதுதானா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.

திருவள்ளுவர் இயற்றித் தந்த திருக்குறள் இலக்கிய வடிவில் அமைந்தது. ஆனால் அது ஒரு இலக்கியம் மட்டுமன்று; அது ஒரு அரசியல், பொருளாதார, சமூக அறிவியல் நூல். இற்றைக்கு 2000ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர்