பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

109


அல்லது திருக்குறளுக்கு விழாவா? விழாவெடுப்பதனாலேயே ஒரு நூல் சிறந்து விடுவதில்லை. விழாவெடுப்பவர்களின் தரத்தைப் பொறுத்தே விழாவுக்குச் சிறப்பு. திருவள்ளுவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்துள்ளோம்? அவருக்கு நன்றியுடையவர்களாகவாவது இருந்திருக்கிறோமா?

இன்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத் தெட்டு ஆண்டுகட்கு முன்பு ஏசு பிறந்தார். ஏசுவைப் பின்பற்றிய மக்கள், ஏசுவையே கண்கண்ட தெய்வமெனப் போற்றும்-போற்றிப் பின்பற்றி ஒழுகும் ஒரு பெருங்கூட்டத்தை நாடு, மொழி, இனம், சமயம் கடந்து உருவாக்கியுள்ளனர். அவர்தம் பெயரால் மக்கள் சமுதாயத்தின் விழுமம் துடைக்கும் பணிமனைகள் பாரினில் பலப் பலவுண்டு. ஆனால் நாம் வள்ளுவருக்கு என்ன செய்தோம்?

'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்,' என்றார் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இனிய உயிரொருமைப் பாட்டு நெறியினை எடுத்துக் காட்டினார் திருவள்ளுவர். இன்றளவும், தமிழர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகள் போகவில்லை. எல்லா உயிர்களும் பிறப்பொக்கும் என்று பேசும் திருக்குறளைப் பாராட்டும் நாட்டில் இனவழிப்பட்ட ஒருமைப் பாட்டைக்கூட இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் காண முடியவில்லை. கவிஞன் இக்பால், இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படுத்திய மாறுதலைக் கூட திருவள்ளுவரால் தமிழினத்தில் செய்ய முடியவில்லை.

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் தோன்றினார். பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற ஓர் ஒப்பற்ற சமுதாயத்தைக் காண மூலதனம் என்ற அரிய நூலைச் செய்து தந்தார். கார்ல் மார்க்ஸுக்குக் கிடைத்த லெனின், ஸ்டாலின் ஆகிய சீடர்கள் உலகின் மக்கள் தொகையில் ஐந்திலொரு பகுதி மக்களைக் கார்ல்மார்க்ஸ் மாமுனிவரைக் கட்டுப்பாடாகப் பின்பற்றி, ஒழுகும்