பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்களாக ஆக்கியிருக்கிறார்கள். மற்ற பல நாடுகளிலும் அதனுடைய ஒளி வீச்சு இருக்கிறது. சோவியத் யூனியனில் ஏழைகளும் பிச்சைக்காரர்களும் இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். நம்முடைய திருவள்ளுவருந்தான் 'இரந்து முயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றியான்' என்று நெஞ்சு துடிக்கக் கூறினார். இது கார்ல் மார்க்ஸுக்கும் முந்திய கருத்து. பிச்சையெடுக்கச் செய்யும் சமுதாயத்தை எதிர்த்தது மட்டுமின்றி அரசனையும் கடவுளையும் எதிர்த்துத் திருவள்ளுவர் முழங்கினார். ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த நாட்டின் நிலை என்ன? பிச்சையெடுக்கிறவர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்கிறதா? குறைந்தபாடில்லை. பிச்சையெடுக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றாமல் பிச்சையெடுப்பவர்களைத் தடை செய்யும் சட்டத்தையல்லவோ செய்து சாதனை செய்திருக்கிறோம். திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் நாம் என்ன தான் செய்திருக்கிறோம் என்பதைச் சிந்தனை செய்யுங்கள்.

சென்றது போகட்டும். இனிமேலாவது திருக்குறள் தமிழினத்தின் வாழ்க்கை நூலாக விளங்கும் நிலை உருவாக வேண்டும்.

வள்ளுவரும்-லெனினும்

ன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருவள்ளுவர் தோன்றினார். அவர் திருக்குறளை இயற்றித் தந்தார். தமிழக மக்கள் போதிய நல்லூழ் இன்மையின் காரணமாகத் திருக்குறளை ஒர் இலக்கியமாக மட்டுமே கருதி, பதவுரை-பொழிப்புரை கண்டு அமைந்து விட்டனர். ஆனால், திருக்குறள் மனிதவியல் விஞ்ஞானமாகும். அது வரலாறு காட்டும் வான் விளக்கு; அலை