பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறைந்தாலும் பெற்ற அளவுக்குப் பயனுண்டு. மிகுதிப்படின் நோயில்லை; வளர்ச்சியே!

வள்ளுவர் மனிதனின் இன்றியமையாத் தேவை அறிவுடைமையே என்றார். அறிவை முதனிலைப்படுத்தி முன்னிறுத்தியது போல், திருவள்ளுவர் வேறு எதனையும் முன்னிறுத்தவில்லை.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

என்று கூறுகிறார். அறிவின்றி வேறு எவை எவை பெற்றிருந்தாலும் அவற்றால் பயனில்லை என்கிறார். 'என்னுடைய ரேனும்' என்ற சொற்றொடரில் சிக்காது எஞ்சியது ஒன்றுமில்லை. திருவள்ளுவர் அறிவுபற்றிக் கூறும் கருத்து அறிவியலுக்கு ஒத்தது. பலர், பல நூற்கள் கற்ற புலமையை அல்லது செய்திகள் அறிந்து கொண்டமையை-அவற்றை எடுத்துச் சொல்லும் திறனையெல்லாம் அறிவு என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். திருக்குறள், கற்பதையும் கேட்பதையும் அறிவு பெறுதற்குரிய வாயிலாகக் கருதுகிறதே தவிர, அவை தம்மையே அறிவு என்று கருதவில்லை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி உடலுக்கு வலிமையாதல் போல், கல்வியும் கேள்வியும் வாழ்க்கைப் பட்டறையில் சோதனை செய்யப் பெற்று அனுபவத்திற்குரியனவாகி உயிர்க்குரிய குணமாகவும், சீலமாகவும், அல்லது ஒழுக்கமாகவும் அது வடிவம் கொள்ளும் பொழுதே அறிவு என்ற நிலையை அடைகிறது. மனிதனை - மனித உலகத்தைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்யப் பயன்படுவதே அறிவாகும். இந்த உண்மையை நாடும் நானிலமும் மறந்து, கற்றவர்கள் வறுமை உடையவர்களாகத் தானிருப்பார்கள் என்று கதையே கட்டிவிட்டன. அறிவு,