பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

119


துன்பத்தை மாற்றாது போனால் அறிவு அறிவேயன்று. இதனை,

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

என்று கூறுகிறது.

அறிவு, மேலும் மேலும் வளரத்தக்கது என்பதும் வள்ளுவர் முடிவு. அறிவுக்கு என்றும் ஒரு முடிவில்லை. "அறிதோ றறியாமை” என்பது வள்ளுவத்தின் வாய்மொழி. இந்தத் திருக்குறளைப் புரிந்து கொண்டு நாம் நம்முடைய அறிவைப் பெருக்கி வளர முயன்றிருப்போமானால் நம்மைப் பீடித்திருக்கின்ற வறுமையிலிருந்து விடுபட்டிருப்போம். நாம்தாம் 'வறுமைக்கே காரணம் நாமல்ல, நமக்கு அப்பாற் பட்டுக் கருணை வடிவமாக இருக்கின்ற கடவுளே' என்ற முடிவுக்கு வந்தவர்கள் ஆயிற்றே! இவ்வுலகின் வேறு எந்த இனமும் கடவுளுக்கு இவ்வளவு பெரிய களங்கத்தை உண்டாக்கவில்லை. இந்த முறையில் அறிவைப் பெருக்கி வளர்ந்திருந்தால் நாமும் மற்ற நாடுகளைப்போல் வளர்ந்திருப்போம்.

இந்த நூற்றாண்டு, அறிவியல் நூற்றாண்டு. அமெரிக்கக் குடி மகன், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களில் பேசப் பெற்ற நிலாவுலகைத் தீண்டியிருக்கிறான். தமிழனோ தமிழ் அறிவியல் மொழியாக வளருமா? வளராதா? என்ற ஐயப்பாட்டில் இன்னும் கிடந்து குழம்புகிறான்! வேறு சிலர் அன்று "ஆண்டவனுக்கு வட மொழியே உரியது” என்று சொன்னதைப் போல அறிவியலுக்கு ஆங்கிலமே உரியதென்று வாதாடுகின்றனர். கூர்ந்து ஆராயின் அது அறிவியல் நாட்டத்தின் விளைவல்ல என்பதும், ஆங்கிலம் படித்த வர்க்கத்தினரின் பாதுகாப்புப் பணியேயாகும் என்பதும் விளங்கும். அறிவியலுக்கு இனம் ஏது? எல்லை ஏது? மொழித்தடைதான் ஏது? ஒரு மனிதன்