பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்பாக எந்த மொழியில் சிந்திக்கின்றானோ அதுவே அறிவியல் மொழி, துறைதோறும் ஆய்வு செய்யவும், மேலும் மேலும் சிந்தனை பெருகி வளரவும் தாய்மொழியே துணை. அறிவைத் திருவள்ளுவர் "ஊறும் அறிவு” என்றார். சுய சிந்தனையின் பாற்பட்ட அறிவே செழுமையான அறிவு. ஊற்றுக்கால் வறட்சியடைவதில்லை; வரத்து நீரை வாங்கித் தேக்கித் தரும் குட்டை, வரவு நின்றால் வறட்சிப்படும். பிறமொழி அறிவு, வரத்து நீர் வாங்கித் தரும் குட்டையேயாகும். சுய சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் தாய் மொழியறிவு ஊறும் அறிவாகும். இந்த உண்மையை நாடறிந்து, நல்லறிவு வளர்த்துப் பயனடையும் நாளே தமிழகத்தின் நன்னாள்.

ஒரு குறளும் - ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லாரும் ஏற்றுக்கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரதநாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சுதந்திரம் கெட்டுப்போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். 'விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்' என்றே பாடுகின்றான். சுதந்திரம் தவறிக் கெட்டுப்போனதற்குரிய அடிப்படைக் காரணம், பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன. இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத்துறையிலும் சரி சமயத்துறையிலும் சரி,